Crime, law and justice
பெண்ணின் ஆடையை விலக்க முயன்றது பாலியல் பலாத்கார முயற்சி ஆகாது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ராஞ்சி, செப். 11– ‘ஒரு பெண்ணின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, அவரது ஆடையை விலக்க முயல்வது
‘ஒரு பெண்ணின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, அவரது ஆடையை விலக்க முயல்வது இந்திய தண்டனை சட்டத்தின்படி பாலியல் பலாத்கார முயற்சி ஆகாது. அதே நேரம் பெண்ணின் கற்புக்கு பங்கம் விளைவித்த குற்றமாக கருதப்படும்’ என, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்க்கண்டில் கடந்த 1999ல், இரவு நேரத்தில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதற்காக பெண்ணின் ஆடையை அவர் விலக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், கடந்த 2006, ஜூலை 25ல் அந்த நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மேல்முறையீடு செய்தார். நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா இம்மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஆய்வு செய்ததில், குற்றஞ்சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரத்துக்கான நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி இதை பாலியல் பலாத்கார முயற்சியாக கருத முடியாது.
எனினும், பெண்ணின் ஆடையை விலக்க முயன்ற குற்றவாளியின் செயல் அருவருக்கத்தக்கது. பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் உள்ளது. எனவே பாலியல் பலாத்கார முயற்சி என்ற குற்றத்தில் இருந்து, பெண்ணின் கற்புக்கு பங்கம் விளைவித்தல் என்ற குற்றமாக மாற்றப்படுகிறது.
வழக்கு விசாரணை காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர், எட்டு மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அந்த சிறைவாசமே நீதியின் நோக்கத்தை நிறைவேற்ற போதுமானது. எனவே அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
