Lifestyle and human interest
பீஹார் வெள்ளத்தில் சிக்கிய 15 மாவட்டங்கள், தவிக்கும் 50 லட்சம் மக்கள்

புதுடில்லி: பீஹார் வெள்ளத்தில் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு காங்கிரஸ் எம்பி. ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
பீஹாரில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள பாட்னா, போஜ்பூர், சரண், மாதேபுரா என 15 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் உள்ள முக்கிய 7 நதிகளின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மழையால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளனர். வெள்ள நிலைமை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ள துணை முதல்வர் விஜய்குமார் சவுத்ரி, தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறி உள்ளார்.
இதனிடையே செப்டம்பர் மாதத்தில் பீஹாரில் 112.7 மி. மீ., மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 6 சதவீதம் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.