அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை நிராகரித்த ஈரான்; என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் அதனைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் பாதுகாப்புத் துறை இந்த பேச்சுவார்த்தை குறித்தான பதிவை நிராகரித்துள்ளது.
இந்நிலையில், டிரம்ப்பின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசியப் பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது சமூக வலைத்தளப்பதிவில், ”பேச்சுவார்த்தை குறித்த அமெரிக்க அதிபரின் முரண்பாடான கருத்துக்களைக்கண்டு யாரும் திசைதிருப்ப வேண்டாம். கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி அளிக்கும்வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப்பதிவில், ”வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா? வேண்டாமா? என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்ததாக என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
