படிப்பை நிறுத்தி நடிக்க சென்ற பழங்குடி சிறுவன் மீண்டும் பள்ளிக்கு திரும்பியதால் மகிழ்ச்சி

பாலக்காடு: கேரள அரசின் சார்பில் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் சேர்க்கும் ‘கூடே’ என்ற திட்டத்தின் தொடக்க விழா நடந்தது.
அதில், மாநில கல்வி அமைச்சர் ஷம்சுதீன், பாலக்காடு மாவட்டம் அகழி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான கருணனின், வாழ்க்கை பயணத்தை குறிப்பிட்டு பேசியதாவது:
பழங்குடி சிறுவனான கருணனின் குடும்பச்சூழல் காரணமாக, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் ஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்தியிருந்தார். பள்ளிக்கு செல்லாத நிலையிலும் கருணனின் கலைத்திறமை வீணாகவில்லை. தேசிய வடிவமைப்பு நிறுவன மாணவரான ஷிஜின் கோவிந்த் இயக்கியுள்ள ‘குளோப்’ என்ற சர்வதேச திரைப்படத்தில், பழங்குடியான ‘கரியன்’ என்ற மைய கதாபாத்திரத்தில் நாயகனாக கருணன் நடித்துள்ளார்.
இந்த படம் இம்மாதம், 25 முதல் 30 வரை நடைபெறும் கேரள சர்வதேச ஆவண மற்றும் குறும்பட விழாவின், போட்டி பிரிவிற்கு தேர்வாகியுள்ளது. இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியை சிந்து வழிகாட்டி உள்ளார். இந்நிலையில், இடைநிற்றல் மாணவர்கள் சந்திக்கும் திட்டத்தின் கீழ், நேரடியாக அவரது பழங்குடியினர் கிராமத்துக்கு சென்று சந்தித்து பேசினோம்.
அப்போது, அவருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தக பையை வழங்கி, மீண்டும் பள்ளிக்கு சென்று படித்து என்னவாக விரும்புகிறாய் என, கேட்டோம். அவர் ஆசிரியராக வேண்டும் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இது போன்ற இடைநின்ற மாணர்கள் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.