கேரள அரசு பஸ் வருவாய் ரூ.355: விசாரணை துவக்கம்
மூணாறு:கேரள அரசு பஸ் 397 கி.மீ., தூரம் ஓடிய நிலையில், ரூ.355 மட்டும் வருவாய் கிடைத்த சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணை துவங்கியது.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக.26ல் கொண்டாடப்பட்டது. அந்த பண்டிகையை ஒட்டி கண்ணூர் மாவட்டத்தில் இயக்குவதற்கு மூணாறு டிப்போவில் இருந்து கேரள அரசு விரைவு பஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
பண்டிகை காலம் ஓட்டம் முடிந்து மூணாறு டிப்போவுக்கு திரும்பிய அன்று வருவாய் ரூ.355 கிடைத்தாக டிரைவர், கண்டக்டர் ஆகியோர் அதிகாரிகளிடம் கணக்கை சமர்பித்தனர். 397 கி.மீ., தூரம் பஸ் ஓடிய நிலையில் ரூ.355 மட்டும் வருவாய் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி போக்குவரத்து கழக தலைமை நிர்வாக இயக்குனருக்கு கீழ் செயல்படும் தனிப்படையை சேர்ந்த தொடுபுழா கட்டுப்பாட்டு ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு நேற்று விசாரணையை துவக்கினர். மூணாறு டிப்போவில் விசாரணை நடத்திய குழு, பஸ் இயக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ் ஸ்டாண்டுகளில் விசாரணை நடத்த உள்ளனர்.