குழந்தை பிறந்த பின் பெண்ணுக்கு திருமணம்
ஹாசன்: திருமணம் செய்வதாக நம்ப வைத்து, இளம் பெண்ணை கர்ப்பிணியாக்கி, குழந்தை பிறந்த பின், தப்பியோடிய இளைஞரை, போலீசார் கண்டுபிடித்து அதே பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஹாசன் நகரின் பீரகனஹள்ளி கிராமத்தின் ராஜு, 25, நிலுவாகிலு கிராமத்தை சேர்ந்த அன்னபூர்ணா, 23, வும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்னபூர் ணாவை திருமணம் செய்து கொள்வதாக ராஜு உறுதி அளித்திருந்தார். இருவரும் நெருக்கமாக பழகியதால், அன்னபூர்ணா கர்ப்பிணியானார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.
குழந்தை பிறந்தும், அவரை திருமணம் செய்யாமல் ராஜு தலைமறைவானார். இது குறித்து, அன்னபூர்ணாவின் பெற்றோர், ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசாரும் நடவடிக்கை எடுத்து, ராஜுவை கண்டுபிடித்தனர். அவரையும், அவரது குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, கவுன்சலிங் கொடுத்தனர். பெண்ணை நம்ப வைத்து, கர்ப்பிணியாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றினால், எந்த விதமான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை விவரித்தனர்.
அதன்பின் மனம் மாறிய ராஜு, திருமணத்துக்கு சம்மதித்தார். அவருக்கும், அன்னபூர்ணாவுக்கும் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக நேற்று திருமணம் செய்து வைத்தனர்.