Politics
புதிய தலைமை செயலகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது.. காரணம் இதுதான்! துரைமுருகன் விளக்கம்

புதிய தலைமைச் செயலகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் ஒரே சாலை உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலக வளாகம் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், சட்டசபையில் முதல்வர் போலீஸ் மானியத்தில் பேசியது சரியல்ல. நிறைய பிரச்சனை இருக்கிறது அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே திமுகவை பற்றி பேசுகிறார். அதுவும் இவர் ஏதாவது கண்டுபிடித்து பேசுகிறார் என்றால் அதுவும் கிடையாது. எப்பவோ நடந்த சர்க்காரியா, எப்பவோ நடந்த மிசா பற்றி பேசுகிறார். அவர் குறிப்பிட்ட வழக்கில் எல்லாம் குற்றவாளிகள் அல்ல என விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் இவ்வளவு நாள் நாங்கள் அரசியல் செய்கிறோம்.
என்னுடைய அரசியல் வாழ்வில் ஒரு முதலமைச்சர் சட்ட சபையில் பேசிய பேச்சுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கிற நிகழ்வு இதுவே தமிழக வரலாற்றிலேயே முதல் முறை. மிசாவில் ஸ்டாலின் அவர்கள் அடிபட்டு உதைப்பட்டு செத்து போயிடுவார் என்பதால் சிட்டிபாபு அவர் மேல் விழுந்து காப்பாற்றினார். அடியை அனைத்தும் சிட்டிபாபு வாங்கி இறந்து விட்டார் இல்லையென்றால் ஸ்டாலின் இறந்திருப்பார்.
கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற திமுகவே காரணம் என விசிக திருமாவளவன் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, எந்த நிகழ்ச்சிக்கு அவர் முகவுரை எழுதுகிறார் என தெரியாது. ஆகையினால் இதற்கு பதில் சொல்ல வேண்டியவர் எங்களுடைய தலைவர் தளபதி தான். இப்போது உள்ள மந்திரிகளுக்கு ஒரு டேட்டாவும் தெரிவதில்லை அப்போதைக்கு பேச முந்திக் கொள்ள வேண்டும் என பேசுகிறார்கள். இது சட்டசபை போல் இல்லை சூட்டிங் போல் உள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்யவில்லை. புதிய தலைமைச் செயலகத்திற்கு நான்கு வழிகள் இருக்க வேண்டும். ஆனால் பட்டினப்பாக்கத்தில் ஒரே ஒரு சாலைதான் உள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் ஆகையால் அங்கு கட்ட முடியாது. என்னுடைய கணக்கு என்னவென்றால் சட்டசபையில் பேசுவதை மடைமாற்றம் செய்வதற்காக இது போன்ற அறிவிப்புகளை செய்கிறார்.
ரூ.1200 கோடியில் சட்டசபை கட்டுவதற்கு பதில் மூன்று சிலிண்டர்க்கு பதிலாக நான்கு சிலிண்டர் கொடுக்க வேண்டியது தானே. இதற்கு மட்டும் எப்படி பணம் வருது. அரசாங்கம் அரசாங்கமாக இல்லை, அமைச்சர்கள், முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
சட்டசபை விதி என்னவென்றால் உட்கார்ந்து உள்ள உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி கோரி சபாநாயகருக்கு கடிதம் அளிக்க வேண்டும். ஆனால் அவர் விதிமுறைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு சென்றிருக்கிறார். இதுவே சட்டமன்றத்தில் மிகப்பெரிய தப்பு. அதேபோல் சட்டமன்றத்தில் இருந்து கொண்டு வெளியில் இருப்பவர்களை பற்றி பேசக்கூடாது, அவர்கள் எப்படி பதில் சொல்ல முடியும்.
சபாநாயகர் சபையை ஒரு மாதிரி நன்றாக நடத்துகிறார் என சொல்லி இருந்தோம். ஆனால் இந்த விஷயத்தில் அவர் தவறிவிட்டார். இதை காரணம் காட்டி சட்டசபை விதியை முன்வைத்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்கட்சிகள் கூறலாம் என தெரிவித்தார்.
