சர்க்கரை ஆலை முன்பு போராட விவசாய சங்கத்தினர் முடிவு
மேலுார்: ‘அலங்காநல்லுார் ஆலையை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்கள் போராட முடிவெடுத்துள்ளன.
மேலுாரில் விவசாய சங்கங்களின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை மீண்டும் சந்தித்து வலியுறுத்தவும், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் செப். 26 ல் அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை முன்பு அனைத்து சங்கங்களை இணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
சங்கத் தலைவர் கூறியதாவது : சர்க்கரை ஆலை மூடப்பட்டிருப்பதால் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். ஏற்கனவே தமிழக அரசு அமைத்த உயர்மட்ட குழு அறிக்கைப்படி ரூ.27 கோடி செலவிட்டால் ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்ற அறிக்கையை, த.வெ.க., அரசு புறக்கணிக்கும் விதமாக செயல்படுகிறது.
விவசாய மானிய பட்ஜெட்டிலும் தென்னக விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் புறக்கணித்திருக்கிறது. போராட்டத்திற்கு பிறகும் ஆலையை திறக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தில் விவசாயி கிருஷ்ணன், தென்னக கரும்பு விவசாய சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், வெள்ளலுார் நாட்டுக் கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் அழகர்சாமி கதிரேசன், வீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.