359 ஊராட்சிகளில் வீணாகும் உரக்குடில்கள்: திடக்கழிவு மேலாண்மை பணிகள் அம்போ

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாததால், சேகரமாகும் குப்பையை துாய்மை பணியாளர்கள் சாலை ஓரம் எரித்தும், நீர்நிலைகளில் கொட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், லத்தூர், புனிததோமையார்மலை ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் 359 ஊராட்சிகள் உள்ளன.
இதில் ஊரக பகுதிகளில் 4,15,800 குடியிருப்புகள் உள்ளன. புறநகர் பகுதிகளான சிங்க பெருமாள் கோவில், ஊரப்பாக்கம், வண்டலுார், வீராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் 22 மினி லாரிகள், 173 டிராக்டர்கள் 667 பேட்டரி வாகனங்கள் வாயிலாக
குப்பை கழிவுகள் அகற்றப்படுகின்றன.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையை பிரிக்க 2019-- -2020ம் ஆண்டு, திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளுக்கு 359 ஊராட்சிகளிலும், 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டது.
வீடுகளில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பையான காய்கறி, பழம் போன்றவை கொட்டப்படடு மண்புழு தயாரித்து விற்பனை செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டதோடு சரி; 359 ஊராட்சிகளிலும் பயன்பாட்டிற்கு வராமலேயே தேக்கமடைந்துள்ளன. சில ஊராட்சிகளில் உரக்குடில் இருந்த சுவடே தெரியாமல் மாயமாகி உள்ளன.
பொதுமக்கள் குப்பை தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டுவதால் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில், நீர்நிலைகளில் குப்பை கொட்டப்பட்டு மாசு ஏற்படுகிறது.
வில்லியம்பாக்கம், பாலுார், திம்மாவரம் போன்ற பகுதிகளில் துாய்மை பணியாளர்களே சாலை ஓரம் குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர். இவற்றை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகளான மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், தையூர் மேல்மருவத்துார், புதுப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், வேங்கை வாசல் ஆகிய எட்டு ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் கூடம் அமைக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடந்து வருகின்றன.
புதிதாக திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து வாங்க துாய்மை பணியாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பசுமை உரக்குடில் குறித்து மாவட்ட நிர்வாகம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.