Crime, law and justice
ரூ.30 கோடி மோசடி வழக்கில் மும்பை நபர் குஜராத்தில் கைது

மும்பை: பங்குச் சந்தை முதலீடு பெயரில், 40க்கும் மேற்பட்டோரிடம், 30 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, அடையாளத்தை மாற்றி தலைமறைவாக இருந்த ரோஷன் பூஷன் சேத், 56, என்பவரை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் ரோஷன் பூஷன் சேத். இவர், கடந்த 2020ல், 'இன்வெஸ்டாக்' என்ற பெயரில் செயலி ஒன்றை உருவாக்கி, பங்குச் சந்தை முதலீடு குறித்து விளம்பரம் செய்தார். இதை நம்பி, மும்பையின் காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா என்பவர் ரோஷனை தொடர்பு கொண்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்.
அவருடைய நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலரும் இதேபோல் முதலீடு செய்தனர். தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சிறிதளவு லாபத்தொகையை தந்த ரோஷன், பின்னர் அவர்களுக்கான பணத்தை தராமல் இழுத்தடித்தார்.
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஆடம்பர கார்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவர், பணத்தை திருப்பிக் கேட்டு முதலீட்டாளர்கள் நெருக்கடி தந்ததை அடுத்து, கடந்த ஏப்ரலில் தலைமறைவானார்.
முதலீடு செய்து ஏமாந்த சஞ்சய் ஹிராலால் ஷா மற்றும் வெளிநாடு வாழ் இந்திய பெண் உட்பட பலர் போலீசில் புகார் அளித்தனர். ரோஷன் மீது வழக்குப்பதிவு செய்த மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு, குஜராத்தின் வல்சாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ரோஷனை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
ரோஷனிடம் இருந்து மூன்று சொகுசு கார்கள், 14 உயர் ரக கைக்கடிகாரங்கள், 1.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 17 லட்சம் ரூபாய் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரின் மூன்று குடியிருப்புகளும் முடக்கப்பட்டன.