Crime, law and justice
நடிகர் விஜய், நாகரத்னா விவாகரத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நடிகர் 'துனியா' விஜய் மற்றும் அவரது மனைவி நாகரத்னாவுக்கு, அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னட நடிகர் துனியா விஜய், நாகரத்னா தம்பதிக்கு 1999 ல் திருமணம் நடந்தது. மோனிஷா, மோனிகா என்ற இரண்டு மகள்களும், சாம்ராட் என்ற மகனும் உள்ளனர்.
இத்தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, 2013ல் மனு தாக்கல் செய்தனர். இவர்களை சமரசம் செய்து வைத்ததால், 2014ல் மனுவை திரும்ப பெற்றனர்.
ஆனால், 2018ல், விஜய் மீண்டும் விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது மனு 2024ன் ஜூனில் தள்ளுபடியானது. இது குறித்து, கேள்வி எழுப்பிய அவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரணை நடத்திய நீதிபதி டி.கே.சிங், நீதிபதி சாந்திபூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, துனியா விஜய்க்கும், நாகரத்னாவுக்கும் விவாகரத்து வழங்கி, நேற்று உத்தரவிட்டது.
நாகரத்னா மற்றும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம், விஜயின் பொருளாதார சூழ்நிலை, வருவாயை கணக்கிட்டு, இரண்டு கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி, அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து, முகநுாலில் துனியா விஜய் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவுக்கு, தலைவணங்குகிறேன். என் விவாகரத்து குறித்து, பொது இடத்திலோ அல்லது ஊடகங்களின் முன்னிலையில் பேச, நான் விரும்பவில்லை. எனக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் சமுதாயத்தில், அந்தஸ்தில் உள்ளனர். அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட கூடாது.
பிள்ளைகளின் எதிர்காலம், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நான் ஏற்கிறேன். இன்று முதல் புதிய வாழ்க் கையை துவக்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
