Science and technology
"விண்வெளியில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா"; அச்சத்தில் உலக நாடுகள்

எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கிடையிலான போர்கள், விண்வெளியை மையமாக கொண்டே நடைபெறும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா, விண்வெளி பாதுகாப்புப்படையை தொடங்கியது. அதே போல, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் விண்வெளி படைகளைத் தொடங்கின.
இந்நிலையில், சர்வதேச விண்வெளிப் பாதுகாப்பு வரலாற்றைப் புரட்டிப்போடும் வகையில், பூமிக்கு மேலே விண்வெளி மண்டலத்தில் தற்காப்பு மற்றும் தாக்குதல் நோக்கிலான 'ஆன்-ஆர்பிட்' விண்வெளி கட்டுப்பாட்டு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக, முதன்முறையாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
மேரிலாந்து மாகாணம் நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க விண்வெளித்துறை செயலாளர் டிராய் மெய்ங்க் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் பேசுகையில், ”விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்க விண்வெளி படை சார்பில், விண்வெளியில் ஆயுதங்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.
இதுவரை விண்வெளியில் ஆயுதங்கள் இருப்பதை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கா, தற்போது அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த கருத்துக்குச் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதன்படி, சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, “விண்வெளியைப் போர்க்களமாக மாற்றக்கூடாது. அமெரிக்காவின் நடவடிக்கையால் விண்வெளியில் ஆயுதங்கள் குவிக்கப்படும் அபாயம் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார். அதே போல, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “விண்வெளியில் எந்தவொரு ஆயுதமும் இருக்கக்கூடாது. இது தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ரஷ்யா தீவிர முயற்சி செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்காவின் இந்த கருத்து உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)