வீடு லீசுக்கு தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி: ஏமாந்த குடும்பத்தினர் நுாதன போராட்டம்
திருவொற்றியூர்: வீடு லீசுக்கு தருவதாகக் கூறி, 8.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் முன் முட்டி போட்டு நுாதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் - காலடிப்பேட்டை, தெற்கு பிரகாரம் தெருவைச் சேர்ந்த இம்ரான். இவர் பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மெகருன்னிசா. இவர்கள் ராஜாகடை, அய்யா பிள்ளை தோட்டம், 1-வது தெருவில் ராஜா - சகிலா தம்பதிக்கு சொந்தமான வீட்டை லீசுக்கு கேட்டுள்ளனர்.
இதையடுத்து, 85,000 ரூபாய் ரொக்கமாகவும், 7.65 லட்சம் ரூபாயை 'ஜி பே' எனும் பரிவர்த்தனை செயலி மூலமாகவும் ராஜா - சகிலா தம்பதிக்கு, 2025- அக்டோபரில் கொடுத்துள்ளனர். ஆனால், பணம் பெற்று ஓராண்டாகியும் வீட்டை ஒப்படைக்காமல் தம்பதி இழுத்தடித்துள்ளனர்.
இதுகுறித்து, இம்ரான் தம்பதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஐந்து முறை புகார் அளிக்க முயன்றும், போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் ஆறாவது முறையாக புகார் மனுவுடன் காவல் நிலையத்துக்கு வந்த இம்ரான் குடும்பத்தினர், வாயில் முன் திடீரென முட்டி போட்டு போராட்டம் நடத்தினர். வெளியே வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.