Politics
கோயம்பேடில் கரும்பு விற்பனை டல் :சாலையோரம் வீசி சென்ற வியாபாரிகள்

கோயம்பேடு:விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட கரும்புகள் விற்பனை இல்லாமல் தேங்கியதால், வியாபாரிகள் சாலையோரம் வீசி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலுார் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, கரும்பு கட்டுகள், 60 லாரிகளில் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரும்புக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால், வியாபாரிகள் அதிக அளவில் கரும்புகளை கொண்டு வந்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்திக்கு முன்தினம், 13ம் தேதி 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 400 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நாளில் ஒரு கட்டு, 200 முதல் 400 ரூபாய் வரையிலும், நேற்று, 100 முதல் 200 ரூபாய் வரையிலும் விற்பனையானது.
எதிர்பார்த்த அளவில் விற்பனை நடைபெறாததால் ஏராளமான கரும்புகள் தேங்கின.
விற்பனையாகாமல் மீதமான கரும்புகளை மீண்டும் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கு கூடுதல் போக்குவரத்து செலவு ஏற்படும் என்பதால், வியாபாரிகள் அவற்றை கோயம்பேடு சுற்றுவட்டார சாலையோரம் மற்றும் கோயம்பேடு சந்தையில் கொட்டிச் சென்றனர். அவற்றில் சிலவற்றை பொதுமக்கள் எடுத்துச் சென்ற நிலையில், மீதமுள்ள கரும்புகளை கால்நடைகள் தின்றன.