Politics
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆழ்துளை கிணறுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் கேட்ட விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பாண்டியராஜன் 39, ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ராமலிங்கம் 68, கைது செய்யப்பட்டனர்.
காணப்பாடி புதுப்பட்டி விவசாயி கோவிந்தராஜ் 58. தனது தோட்டத்தில் ஆழ்துளை கிணறுக்கு மின் இணைப்பு பெற காணப்பாடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தடையில்லா சான்று கோரினார். இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ராமலிங்கம் மூலம் வி.ஏ.ஓ., ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்கவே கோவிந்தராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை கோவிந்தராஜிடம் தந்து அவர்களிடம் கொடுக்க அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் மதியம் வி.ஏ.ஓ., பாண்டியராஜன் வெளியே சென்றிருந்த நிலையில் ராமலிங்கத்திடம் ரூ.2 ஆயிரத்தை தந்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணைக்கு பின் வி.ஏ.ஓ., பாண்டியராஜன், ராமலிங்கம் கைது செய்யப்பட்டனர்.
