Sport
30 பந்தில் சதம் ... அபிஷேக் சாதனை: கோப்பை வென்றது இந்தியா

டில்லி: அபிஷேக் சர்மா 30 பந்தில் சதம் விளாச, இந்திய அணி 127 ரன் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் 3வது, கடைசி போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக யாஷ் தாகூர் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அபிஷேக் விளாசல்: இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஓமர்சாய் வீசிய முதல் ஓவரில் 2 சிக்சர் அடித்த அபிஷேக், பரூக்கி வீசிய 2வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். மறுமுனையில் அசத்திய சஞ்சு சாம்சன், முகமது நபி வீசிய 5வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். இந்த ஓவரில் அபிஷேக், 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச 29 ரன் கிடைத்தது.
அதிரடியாக ஆடிய அபிஷேக் 30 பந்தில், சதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்த போது ரஷித் கான் 'சுழலில்' அபிஷேக் (108 ரன், 34 பந்து, 11X6, 9X4, 'ஸ்டிரைக்ரேட்' 317.64) ஆட்டமிழந்தார். திலக் வர்மா (2) 'ரன்-அவுட்' ஆனார். சஞ்சு சாம்சன் 50 ரன்னில் அவுட்டானார்.
ஷிவம் துபே (14), இஷான் கிஷான் (10), நிதிஷ் குமார் ரெட்டி (1) நிலைக்கவில்லை. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (29) ஓரளவு கைகொடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 221/7 ரன் எடுத்தது. அக்சர் படேல் (5) அவுட்டாகாமல் இருந்தார்.
கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவரில் 94 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் (25), ஓமர்சாய் (17), குர்பாஸ் (15) ஆறுதல் தந்தனர்.
இந்தியா சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேக சதம் விளாசிய, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார் அபிஷேக். இவர், 30 பந்தில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (எதிர்: காம்பியா, 2024), தென் ஆப்ரிக்காவின் ஆலன் (எதிர்: நியூசி., 2026) தலா 33 பந்தில் சதமடித்திருந்தனர்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் அபிஷேக் (30 பந்து). முதலிரண்டு இடங்களில் எஸ்தோனியாவின் சாஹில் சவுகான் (27 பந்து, எதிர்: சைப்ரஸ், 2024), துருக்கியின் முகமது பஹாத் (29 பந்து, எதிர்: பல்கேரியா, 2025) உள்ளனர்.
ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில், 9000 ரன்னை எட்டினார் சஞ்சு சாம்சன். இதுவரை 351 போட்டியில், 8 சதம், 56 அரைசதம் உட்பட 9027 ரன் குவித்துள்ளார்.