தெலுங்கானா சட்டசபையில் கடும் அமளி 22 பி.ஆர்.எஸ்., – எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டதாக, எதிர்க்கட்சியான, பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதியின், 22 எம்.எல்.ஏ.,க்களை மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் கடம் பிரசாத் குமார் உத்தரவிட்டார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் ஹைதராபாதில் உள்ள சட்டசபையில், கடந்த 7ல் துவங்கிய மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர், வரும் 12 வரை நடக்கிறது.
இந்நிலையில், சட்டசபை நேற்று கூடியதும், பெண் எம்.எல்.ஏ.,க்கள் மீது போலீசார் அத்துமீறி நடந்ததாக கூறப்படும் விவகாரம், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கக் கோரி, பி.ஆர்.எஸ்., செயல் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கே.ராமா ராவ் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவரும், பி.ஆர்.எஸ்., தலைவரும், தன் தந்தையுமான கே.சந்திரசேகர ராவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்து விவாதிக்க அவர் வலியுறுத்தினார்.
அப்போது, சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்ட பி.ஆர்.எஸ்., – எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இருக்கைகளுக்கு செல்லும்படி சபாநாயகர் கடம் பிரசாத் குமார் பல முறை வலியுறுத்தியும், அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட பி.ஆர்.எஸ்., – எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரை மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் கடம் பிரசாத் குமார் அறிவித்தார். இவர்களில், கே.டி.ராமா ராவ், அனில் ஜாதவ், டி.ஹரிஷ் ராவ், ஜி.ஜெகதீஷ் ரெட்டி, சபிதா இந்திரா ரெட்டி, சுனிதா லட்சுமா ரெட்டி உள்ளிட்டோர் அடங்குவர்.
மொத்தம், 119 சட்டசபை தொகுதிகளை உடைய தெலுங்கானா சட்டசபையில், பி.ஆர்.எஸ்., கட்சிக்கு, 37 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து, 22 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து, கவர்னர் சிவ பிரதாப் சுக்லாவை நேரில் சந்திக்கவும் பி.ஆர்.எஸ்., மேலிடம் முடிவு செய்துள்ளது.