Arts, culture, entertainment and media
ஜாடம் மைக்ரோபியல் சொல்யூஷன் (Jadam Mycrobial Solution) தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?
காப்புக் காடுகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள் என அனைத்து இடங்களிலும் இந்த மரத்தை வளர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் 15 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் தென்னை, நெல், காய்கறிகள், பழமரங்கள் எனச் சாகுபடி செய்து வருகிறோம். வெளிநாடுகளில் இயற்கை விவசாயிகள் அதிகம் பயன் படுத்தும் `ஜாடம் மைக்ரோபியல் சொல்யூஷன்’ தமிழ்நாட்டில் கிடைக்குமா?. இதன் விலை என்ன, இதைப் பயன்படுத்தினால் பலன் கிடைக்குமா?”
திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி, முனைவர் உதயகுமார் பதில் அளிக்கிறார். இவர், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று, அங்கு கடைப்பிடிக்கப்படும் இயற்கை வேளாண்மை குறித்த ஆய்வுகளை மேற் கொண்டவர்.
“ஜாடம் மைக்ரோபியல் சொல்யூஷனை கடையில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். கொரிய விவசாயிகளின் இதயத்தில் இடம்பிடித்த ‘இயற்கை வேளாண் வல்லுநர்’ யங் ஷாங் ஷோ கண்டுபிடித்த எளிய தொழில்நுட்பம் இது. ‘ஜே.எம்.எஸ்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழில் ஜாடம் நுண்ணுயிரி திரவம் என வேளாண் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இது, குறைந்த செலவில் அதிக பலன் தரக்கூடிய இடுபொருள். கொரிய விவசாயிகள் மட்டுமல்லாமல்… அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளும் இதைப் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறார்கள்.
‘இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், இடு பொருள்களுக்கு அதிகம் செலவு செய்யக் கூடாது. சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்’ என வலியுறுத்துகிறார், யங் ஷாங் ஷோ.
விவசாயிகள், தங்கள் பகுதிகளில் கிடைக்கும் செலவில்லாமல் அல்லது குறைந்த செலவில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி, இடுபொருள்கள் தயார் செய்வதற்கான பல்வேறு தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இவர் கண்டுபிடித்த இயற்கை வேளாண் இடு பொருள்களில், அதிக கவனம் ஈர்த்தது, ஜாடம் மைக்ரோபியல் சொல்யூஷன்.
தயார் செய்யும் முறை!
ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாத, நன்கு வளமான நிலப்பகுதியிலிருந்து இலை மட்குடன் கூடிய மண் அரை கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பிருந்தால், அடர்ந்த வனப்பகுதி அல்லது மலையடிவாரப் பகுதியிலிருந்து மண்ணை சேகரித்தால் சிறப்பாக இருக்கும். இதோடு, வேகவைத்த உருளைக்கிழங்கு ஒரு கிலோ, கல் உப்பு 500 கிராம், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம், மெல்லிய துணிப்பைகள் 2 (சிறு துளைகள் கொண்ட கொசு வலை போன்ற துணிப்பைகள்) ஆகியவை தேவை.
பிளாஸ்டிக் டிரம்மில், சுத்தமான மழைநீர் அல்லது நிலத்தடி நீரை நிரப்ப வேண்டும். குளோரின் கலக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கை நன்கு மசித்து, அதோடு கல் உப்பைச் சேர்த்து துணிப்பையில் போட்டு, மூட்டையாகக் கட்ட வேண்டும். மற்றொரு துணிப் பையில் இலை மட்குடன் கூடிய மண்ணைப் போட்டு மூட்டையாகக் கட்ட வேண்டும். இரண்டு மூட்டைகளையும் ஒரு குச்சியில் கட்டி, தண்ணீருக்குள் இறக்கி, கைகளால் நன்கு பிசைய வேண்டும். அதைத் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு அந்த இரு மூட்டைகளையும் வைத்து, டிரம்மை மூடிவிட வேண்டும்.
அந்தந்தப் பகுதியில் உள்ள வெப்பநிலைக்கு ஏற்ப, 1-4 நாள்களில் ஜாடம் நுண்ணுயிரி திரவம் தயாராகும். சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள பகுதியாக இருந்தால், அடுத்த 24 மணிநேரத்தில் தயாராகி விடும். சுமார் 25 டிகிரி வெப்பநிலை உள்ள பகுதியாக இருந்தால் 72 மணி நேரத்திலும், 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள பகுதியாக இருந்தால் 96 மணி நேரத்திலும் திரவம் தயாராகும். இரண்டு மூட்டைகளையும் வெளியில் எடுத்துவிட்டு, பிளாஸ்டிக் கேனில் உள்ள திரவத்தைப் பயன்படுத்தலாம். பாசனநீரில் கலந்து விடுவதன் மூலமும், பயிர்களின் மீது தெளிப்பதன் மூலமாகவும் பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் போதுமான அளவு கிடைத்து விடும். ‘தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழ வகைப் பயிர்களில் இத்திரவத்தைப் பயன்படுத்தினால், வேகமான வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூல் கிடைக்கிறது’ எனக் கொரிய விவசாயிகள் சொல்கிறார்கள்.
நிலம் நல்ல வளமாக இருந்தால் 8 ஏக்கர் பரப்புக்கு 500 லிட்டர் திரவத்தைப் பாசன நீரில் கலந்து விட்டாலே போதுமானது. வளம் குறைவான நிலமாக இருந்தால், அதிகளவில் உபயோகப்படுத்த வேண்டும். இலைவழி ஊட்டமாகத் தெளிப்பதாக இருந்தால் 500 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜாடம் திரவம் மற்றும் 1 லிட்டர் இயற்கை முறையிலான ஒட்டுப்பசை திரவம் கலந்து தெளிக்கலாம்.
கால்நடை வளர்ப்புக்கும் கைகொடுக்கும்!
கொரிய விவசாயிகள், கால்நடை வளர்ப்பிலும் ஜாடம் நுண்ணுயிரி திரவத்தைப் பயன்படுத்துகிறார்கள். 20 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம், இந்தத் திரவத்தைச் சேர்த்து, குடிநீர் மற்றும் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் கால்நடைகளின் செரிமானத் தன்மை அதிகரிக்கும். கொரிய விவசாயிகள், தங்களுடைய மாட்டுத் தொழுவத்தில் வீசும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, இந்தத் திரவத்தைத் தெளிக்கிறார்கள்.
பயிர்களுக்கு மூலிகை பூச்சி விரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கி உள்ளிட்ட கரைசல்களை தெளிக்கும்போது, அவற்றுடன் ஒட்டுப் பசை சேர்ப்பது மிகவும் அவசியம். அவ்வாறு சேர்த்தால்தான் பயிர்கள், கரைசலை முழுமையாக உட்கிரகிக்கும். பெரும்பாலான இயற்கை விவசாயிகள், இதற்குக் காதி சோப் பயன்படுத்துகிறார்கள். கடைகளில் வாங்கப்படும் காதி சோப்பில் அதிகளவு ரசாயனம் கலந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதற்கு மாற்றாக, அதிக ரசாயனக் கலப்பில்லாத ஓட்டுப்பசை திரவம் தயாரிப் பதற்கான தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளார், யங் ஷாங் ஷோ.
ஜாடம் ஒட்டுப் பசை திரவம் தயார் செய்ய… 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டி கேன், 1.8 லிட்டர் கடுகு எண்ணெய் (தங்கள் பகுதியில் மலிவான விலையில் கிடைக்கும் எந்த வகையான சமையல் எண்ணெயை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்), 320 கிராம் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு ஆகியவை தேவை.
இயற்கை வேளாண் இடுபொருளில் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு பயன் படுத்துவது சரியா என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானது. அமெரிக்காவில் இயற்கை வேளாண்மைக்குச் சான்று அளிக்கும் நிறுவனம் இதை அங்கீகரித்துள்ளது. உலகம் முழுவதும் இயற்கை வேளாண்மையில் குறைந்த அளவு பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தயார் செய்யும்போது, முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்துகொள்வது நல்லது. இது நன்கு ஒட்டும் தன்மை கொண்டது என்பதால், கவனமுடன் செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் கேனில் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு பவுடரை போட்டு, 250 மில்லி தண்ணீர் ஊற்றி, ஒரு குச்சியால் நன்கு கலக்கி விட வேண்டும். அதைத் தொடர்ந்து கடுகு எண்ணெயை அதில் ஊற்றி சுமார் 10 நிமிடம் நன்கு கலக்கினால், பால் போன்ற வெண்மை நிறம் உருவாகும். இதில் காற்று புகாதவாறு, மூன்று நாள்களுக்கு மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு மூடியைத் திறந்து பார்த்தால், அந்தக் கலவை மெழுகு பதத்துக்கு மாறி யிருக்கும். ஓர் இரும்புக் கம்பியால் அதை உடைத்து, 8 லிட்டர் தண்ணீர் ஊற்றி, நன்கு கலக்கி விட வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் ஜாடம் ஒட்டுப் பசை திரவம் தயாராகி விடும்.
பயிர்களுக்கு மூலிகை பூச்சி விரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கி உள்ளிட்ட கரைசல் தெளிக்கும்போது இந்தத் திரவத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒரு லிட்டர் கரைசலுக்கு 2 மில்லி வீதம் ஜாடம் ஒட்டுப் பசை திரவம் கலந்து தெளிக்கலாம். இதனால் இரட்டிப்புப் பலன் கிடைக்கும். இது ஒட்டுப்பசையாக மட்டுமல்லாமல்… பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவும். இலைப்பேன், காய்ப்புழு, ஆந்த்ராக்ஸ், சாம்பல் நோய் உள்ளிட்டவற்றை இது கட்டுப்படுத்துவதாகக் கொரிய விவசாயிகள் சொல்கிறார்கள்.
அமெரிக்கா அருகில் உள்ள ஹவாய் தீவில், அந்த நாட்டு அரசு, காபி தோட்டங்களில், இயற்கை பூச்சி விரட்டியுடன் ஜாடம் ஒட்டுப் பசை திரவத்தைப் பயன்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், காய்ப்புழு தாக்குதல் 99 சதவிகிதம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.”
“எங்களுடைய இயற்கை வேளாண் தோட்டத்தில் வேளாண் சுற்றுலாத் திட்டத் தைச் செயல்படுத்த உத்தேசித் துள்ளோம். அழகுக்காக வளர்க்கப்படும் கோனோகார்பஸ் (Conocarpus) மரங்களை இங்கு நடவு செய்ய விரும்புகிறோம். தரமான கன்றுகள் எங்கு கிடைக்கும்?”
``சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைப்பதாகக் கூறி கோனோகார்பஸ் மரங்களை வளர்க்கத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி வெளியிடப் பட்டுள்ளது. பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த கோனோகார்பஸ் மரங்கள், அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. காம்பரடேசியே (Combretaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை மரம், நெடுஞ்சாலையோரங்கள் மற்றும் பூங்காக் களில் அதிகம் காணப்படுகின்றன. அடர் பச்சை நிற இலைகளைக் கொண்ட இந்த மரம், வேகமாக வளரும் திறன் கொண்டது. இது எந்த வகையான மண்ணிலும், கால நிலையிலும் வளரும் திறன் கொண்டது.
இந்த மரத்தின் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடக்கும்போது, காற்றில் அந்தத் துகள்கள் பரவி மனிதர்களுக்குக் காய்ச்சல், இருமல், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு, வல்லுநர் குழு அமைத்து முறையான ஆய்வுகள் மேற்கொண்டு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட பிறகே, தடை விதித்துள்ளது.
காப்புக் காடுகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள் என அனைத்து இடங்களிலும் இந்த மரத்தை வளர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து கோனோ கார்பஸ் கன்றுகளை இறக்குமதி செய்வதற்கும், நர்சரிகளில் இந்தக் கன்றுகளை வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிலங்களில் இந்த மரங்கள் இருந்தால், அவற்றை அகற்றி, அந்த இடத்தில் நாட்டின மரங்களை நடுமாறு தமிழக அரசு வலியுறுத்துகிறது.
தமிழக அரசு, கடந்த ஆண்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கோனோகார்பஸ் மரம் இருந்தால் உடனடியாக அகற்றிவிட்டு... மனிதர்கள், பறவைகள், விலங்குகளுக்கு ஏற்ற வேம்பு, புங்கை, நாவல், பூவரசு போன்ற பாரம்பர்ய உள்நாட்டு மரங்களை நட வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.
ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடு களிலும், இந்தியாவில் குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் இந்த மர வளர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.’’
