11ம் கட்ட அகழாய்வில் உறைகிணறு அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கீழடி: கீழடி 11ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட இரண்டாவது உறைகிணறு எட்டு அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியில் வாழ்ந்த மக்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக ஒவ்வொரு கட்ட அகழாய்விலும் இரண்டு முதல் ஏழு உறைகிணறுகள் வரை கிடைத்து வருகின்றன.
உறைகிணறுகள் குடிநீர், பாசனம் மற்றும் சாயத்தொழிலுக்கு பயன்படுத்தியுள்ளனர். தண்ணீரை கொண்டு வரவும், கழிவு நீரை வெளியேற்றவும் திறந்த மற்றும் மூடிய நிலை வாய்க்கால்களும் பயன்படுத்தியுள்ளனர்.
11ம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து மூன்று வித வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டிருந்தன.
ஏற்கனவே இரண்டு அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப் பட்டது.
இரண்டாவதாக கண்டறியப்பட்ட உறைகிணறு தற்போது எட்டு அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. உறைகிணற்றின் அடுக்குகள் சேதமடையாமல் உள்ளன.
உறைகிணறு அடுக்குகள் மேற்புறம் குறுகியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும், ஒன்றுக்குள் ஒன்று சொருகி கொள்ளும் அமைப்புடன் உறைகிணறுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உறைகிணற்றில் மேலும் சில அடுக்குகள் இருக்க வாய்ப்புள்ளதால் அந்த குழியில் தொடர்ச்சியாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.