செதுக்கிய ஆசிரியர்கள்
வெற்றியின் வேர்கள் மெஜஸ்டிக் கந்தசாமி, தலைவர், பின்னலாடை ஏற்றுமதி நிறுவன குழுமம்: திருப்பூரில் பள்ளிப்
மெஜஸ்டிக் கந்தசாமி, தலைவர், பின்னலாடை ஏற்றுமதி நிறுவன குழுமம்:
திருப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்து, பொள்ளாச்சியில் பாலிடெக்னிக் படித்தபோது எனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் மோதிராம். மாணவர்கள் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வர வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கண்டிப்புடன் இருந்தார். தாமதமாக வந்தால் ஒரு ரூபாய் அபராதம். அன்றைய காலத்தில் அது பெரிய தொகை. அபராதம் கட்ட வேண்டியதால் சில நாட்களில் காலை உணவைக்கூட தவிர்த்திருக்கிறேன்.
ஆனால், அவர் கற்றுக் கொடுத்தது நேரம் தவறாமை மட்டுமல்ல. எந்தச் செயலையும் தெளிவாகச் செய்ய வேண்டும்; யாரையும் ஏமாற்றக் கூடாது; நியாயப்படி நடக்க வேண்டும் என்பதே அவரது வாழ்க்கைப் பாடம்.
படிப்புக்குப் பிறகு திருப்பூரில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டேன். ஆர்டர்களைப் பெறுவதிலும், உற்பத்தி செய்து கொடுப்பதிலும் நேரம் தவறாமையையும் நேர்மையையும் கடைப்பிடித்தேன். அதுவே தொழிலில் வெற்றிக்கு அடித்தளமானது. பின்னர் ஏற்றுமதித் துறையிலும் கால்பதித்து வெற்றி பெற்றேன்.
எனது தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஆசிரியர் அன்று கற்றுக் கொடுத்த தெளிவு, நேரம் தவறாமை, நேர்மை மற்றும் நியாயம்தான்.
ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியம். குருவை மதித்து மரியாதை செய்பவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
டாக்டர் ராஜ்குமார், இந்திய மருத்துவர் சங்க பொதுக்குழு உறுப்பினர்:
திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தபோது, எனக்கு ஆங்கில ஆசிரியராகவும் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தவர் தர்மலிங்கம். மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அவர் சிறந்த முன்மாதிரி.
அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால், பலரும் அது முடியாத காரியம் என்பதுபோல் எதிர்மறையாகப் பேசினர். அந்த நேரத்தில் தர்மலிங்கம் ஆசிரியர்தான், “உன்னால் நிச்சயமாக முடியும்” என்று எனக்குள் நம்பிக்கையை விதைத்தார்.
மருத்துவம் படிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் செய்தார். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கையொப்பம்கூட அவரிடம்தான் பெற்றேன்.
அவர் அளித்த ஊக்கம்தான் இன்று நான் மருத்துவராக இருப்பதற்கான முக்கியக் காரணம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் ஒருவர் தர்மலிங்கம் ஆசிரியர்.
என் தாயாரே தமிழாசிரியர் என்பதால், சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கமும் இலக்கிய ஆர்வமும் இருந்தது. பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியர்கள் அளித்த ஊக்கத்தால், கதை, கட்டுரை, கவிதை எழுதவும், மேடைகளில் பேசவும் ஆர்வம் அதிகரித்தது.
வாசுகி கல்லூரியில் படித்தபோது கந்தசாமி சார் எடுக்கும் வகுப்புகளைத் தவறவிட மனம் வராது. பின்னர் ஹிந்துஸ்தான் கல்லுாரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தபோது, தமிழாசிரியர் மணிவண்ணன் சார் எனது சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
கம்பராமாயணத்தை ஒரு திரைக்கதை போலவும், காட்சிப்படுத்தும் முறையிலும் அவர் கற்பிப்பார். அதுவே சங்க இலக்கியங்களை ஆழமாகப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரது கற்பித்தல் முறையே சினிமாத் துறையில் கால்பதிக்க எனக்கு ஒரு துாண்டுகோலாக அமைந்தது.
விளம்பரத் துறையில் பணியாற்றியபோதும் அவர் எனக்கு ரேடியோ ஜிங்கிள்ஸ் எழுதிக் கொடுத்தார். கடந்த 2009-ம் ஆண்டிலேயே, நான் நிச்சயம் படம் எடுப்பேன் என நம்பி எனக்காகப் பாடல் எழுதினார். எனது ‘குரங்கு பெடல்’ படத்துக்கும் பாடல் எழுதினார்.
நான் அவருக்கு வாய்ப்பு தரவில்லை; அவர்தான் எனக்கு வாய்ப்பையும் நம்பிக்கையையும் தந்தார். என் திரைப்பயணத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள் என் தமிழாசிரியர்கள்தான்.
பெர்னார்டு அந்தோணிசாமி,முன்னாள் தலைவர், திருப்பூர் பில்டர்ஸ் கிளப்:
மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த காலத்து ஆசிரியர் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. வரலாற்று ஆசிரியர் சிவசுப்பிரமணியம் திட்டியது, கணக்கு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என் குறும்புகளுக்காக தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்றது, ரத்தினம் ஆசிரியரைக் கண்டாலே பயந்து ஓடியது என பல நினைவுகள் உள்ளன.
ஆசிரியர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால், அவர்களின் கண்டிப்பும் தண்டனையும் நம்மை பக்குவப்படுத்தும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் பி.காம்., முடித்து, 10 ஆண்டுகள் ஆடிட் அலுவலகத்தில் பணியாற்றினேன். பின்னர் கட்டடத் துறையில் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டு, பல கட்டடங்களைக் கட்டி, திருப்பூர் பில்டர்ஸ் கிளப்பின் தலைவராக உயர்ந்தேன்.
பள்ளியில் எவரைக் கண்டு பயந்து ஓடினேனோ, அந்த ரத்தினம் ஆசிரியரையே பின்னாளில் நான் கட்டிய பங்களாவுக்கு அழைத்து வந்து, ஒரு வாரம் தங்க வைத்து உபசரித்தேன். அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றேன்.
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
ஒரு கட்டடத்துக்கு உறுதியான அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல என் கல்வி, தொழில், வாழ்க்கை வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் அமைத்த அடித்தளம் மிக முக்கியம்.
11 மற்றும் 12-ம் வகுப்புகளில் எனக்கு வழிகாட்டிய கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர், படிப்பின் அவசியத்தையும் அதை தீவிரமாக அணுக வேண்டியதையும் புரியவைத்தார். ஒவ்வொரு மாணவரின் திறமையையும் குறைகளையும் கண்டறிந்து தனிப்பட்ட அக்கறை காட்டுவார். அவரது கண்டிப்பு என்னுள் ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் விதைத்தது.
கணக்கு ஆசிரியர் செல்வம் சார், கடினமாகத் தோன்றிய கணிதத்தை எளிமையாக்கியவர். கணிதப் பயத்தைப் போக்கியதோடு, எந்தப் பிரச்னையையும் பொறுமையாக அணுகினால் தீர்வு உண்டு என்ற வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்தார்.
ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களை நாம் மறந்துவிடலாம். ஆனால், அவர்கள் விதைத்த தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுப்புணர்வு போன்ற பண்புகளை ஒருபோதும் மறக்க முடியாது.
என் வாழ்க்கையை வடிவமைத்த உண்மையான ‘ஆர்கிடெக்ட்’கள் என் ஆசிரியர்கள்தான்.
கதிரவன், எலாஸ்டிக் உற்பத்தி நிறுவன நிறுவனர்:
பழநி அருகேயுள்ள ஒரு சிறிய விவசாய கிராமம்தான் என் சொந்த ஊர். எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பழனியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, படிப்பில் நாட்டம் இல்லாததால் கல்வியைத் தொடரவில்லை.
ஆனால், பள்ளி ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்தான் என்னைத் தொடர்ந்து வழிநடத்தின. என் வகுப்பாசிரியர் சாமுவேல், பாடங்களோடு நல்லொழுக்கம், தூய நடத்தை, கண்ணியம் உள்ளிட்ட பண்புகளையும் கற்றுக் கொடுத்தார். மற்ற ஆசிரியர்களும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைப் புரியவைத்தனர்.
கடந்த 1991-ம் ஆண்டு வேலை தேடி திருப்பூருக்கு வந்தேன். முதலில் பிரிண்டிங் நிறுவனத்தில் ஹெல்பராக வேலை செய்தேன். பின்னர் நிட்டிங் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து, எட்டு ஆண்டுகள் பணியாற்றி உயர் பதவி வரை உயர்ந்தேன்.
பின்னர் வெளியே வந்து 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய அளவில் தொழில் தொடங்கினேன். இன்று தென் மாநில அளவில் தலைசிறந்த எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கியுள்ளேன்.
எனது வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஒழுக்கம், மரியாதை, அன்பு போன்ற பண்புகள்தான். எனது வாழ்க்கை வளர்ச்சிக்கான அடித்தளமே ஆசிரியர்கள் அன்று அமைத்ததுதான்.
செந்தில்குமார், பெட்ரோல் பங்க் உரிமையாளர், பொங்கலுார் கவுண்டம்பாளையம்:
பெருந்தொழுவு அரசு பள்ளியில் படித்தபோது, எனக்கு தமிழாசிரியராக இருந்தவர் பழனிசாமி. ஏழ்மையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்; எந்த நிலையிலும் பொய் சொல்லக்கூடாது என்பதை எப்போதும் வலியுறுத்துவார்.
ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரையே உதாரணமாகச் சொல்லலாம். திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்க்கைப் பாடங்களை எளிமையாகப் புரிய வைப்பார். ஒவ்வொரு மாணவரும் நன்றாகப் படித்து உயர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
வகுப்பறையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நியாயம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தவர். அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும், அவர் கற்றுத் தந்த நற்பண்புகளும் நினைவுகளும் என்றும் என்னுடன் இருக்கும். அப்படிப்பட்ட ஆசிரியரை ஒருபோதும் மறக்க முடியாது.
டெக்ஸ்டைல் வர்த்தகர் மற்றும் ஆலோசகர் வெங்கட்:
கொங்குமெயின் ரோடு வெங்கடாசலபதி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றேன். தலைமை ஆசிரியர் அமானுல்லா, ஆசிரியைகள் சுப்புலட்சுமி, விக்டோரியா ஆகியோரின் கண்டிப்பும், கற்பிக்கும் முறையும் என்னை பக்குவப்படுத்தின.
பின்னர் சின்னசாமி அம்மாள், நஞ்சப்பா பள்ளிகளில் படித்தேன். தலைமை ஆசிரியர் நாகராஜ் எனது ரோல் மாடலாக இருந்தார். கணித ஆசிரியர் ரகுநாதன், ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் பாடங்களை எளிதாக புரிய வைத்தனர்.
தொடக்கக் கல்வியே வாழ்க்கையின் அடித்தளம். அந்தக் காலத்தில் ஆசிரியர்களை குருவாக மதித்தோம். மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களே முக்கியம். எனது வாழ்க்கையின் சிற்பிகளான ஆசிரியர்களின் அறிவுரை இன்றும் என்னை வழிநடத்துகிறது.