Environment
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற நெல் சாகுபடி விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
கோவை: வேளாண் பல்கலை கழகமும் சிங்கப்பூரின் ‘டெமசெக்’ உயிர் அறிவியல் ஆய்வகமும் இணைந்து, திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தின. பல்கலை இயற்கை வள மேலாண்மை இயக்குனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
பருத்திக்கோட்டை எனும் அந்த கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், தாளடி மற்றும் கோடை என இரண்டு பருவங்களில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை குறைக்க நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் குறித்து விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
நெல் சாகுபடியில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்து, உற்பத்தியை அதிகரிக்க ’பாய்ச்சலும் காய்ச்சலும் நீர் பாசன முறை’ (Alternate Wetting and Drying) எவ்வாறு பலன் அளிக்கும் என விவரித்தனர். வேளாண் பல்கலை பரிந்துரைக்கும் டிஎல்எல் உரக்கலவை, பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள், மீத்தேன் பயன்படுத்தும் நுண்ணுயிரி கலவை ஆகிய தொழில்நுட்பங்கள் இந்த களத்தில் பரிசோதிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கிய டெமசெக் உயிரி அறிவியல் சோதனைக்கூடத்தின் பேராசிரியர்கள் சீனிவாசன், கின்ஸ் வர்கீஸ், கோ புவே யீ ஆகியோர் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டிஎல்எல் உர மேலாண்மை, பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை தேர்வு செய்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
சுற்றுச்சூழல் துறை இணைப் பேராசிரியர் பவுல் செபாஸ்டியன், ‘‘காவிரி டெல்டா பகுதியில் நிலையான வேளாண்மைக்கான நம்பிக்கைக்குரிய ஒரு புதிய பாதையாக இது அமையும்’’ என்றார்.