வரவேற்பைப் பெற்ற ஹைட்ரஜன் ரயில்... வேகத்தை உயர்த்த ரயில்வே திட்டம்!

மாற்று எரிசக்தி பயன்பாட்டில் முக்கிய முன்னேற்றத்தை அடையும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் என்ஜினை தயாரிக்கும் பணியில் 2022-ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே ஈடுபட்டு வந்தது.
ஹைட்ரஜன் ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்டராக உயர்த்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில், 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
மாற்று எரிசக்தி பயன்பாட்டில் முக்கிய முன்னேற்றத்தை அடையும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் என்ஜினை தயாரிக்கும் பணியில் 2022-ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே ஈடுபட்டு வந்தது. 140 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன.
இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே அண்மையில் இந்த ரயில் சேவை பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
இதற்கிடையே, தற்போது ஹைட்ரஜன் ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்டராக உயர்த்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஊடகங்களிடம் பேசிய ரயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமார், ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரயில்கள் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதாகக் கூறினார். இருப்பினும், இந்த ரயில்களை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதித்திருப்பதாகவும், இந்த ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு படுக்கை வசதிகள் கொண்ட 11 வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பதாக சதீஷ் குமார் கூறினார். 2028ஆம் ஆண்டு உஜ்ஜைனில் நடைபெறவுள்ள சிம்ஹஸ்தா கும்பமேளா திருவிழாவுக்காக 125 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக சிசிடிவி கேமராக்கள் ஏஐ மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தூர் - மன்மத் ரயில் பாதை திட்டத்திற்கு 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 5 ஆண்டுகளில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமார் குறிப்பிட்டார்.
