ஒரு மணி நேரத்துக்கு மழை வாட்டிய வெயிலுக்கு ஒத்தடம்
அன்னூர்: அன்னுாரில் நேற்று கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அன்னுார் வட்டாரத்தில், சில மாதங்களாக, பருவ மழை பொய்த்து விட்டது. நிலத்தடி நீர் மட்டம் 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. பெரும்பாலான குளம், குட்டைகளில் நீர் வறண்டு விட்டன. ஊராட்சிகளுக்கு சொந்தமான பொது போர் வெல்களில் நீர் குறைந்து விட்டது. சில பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் லாரிகளில் எடுத்து விநியோகித்து குடிநீர் பிரச்னையை சமாளித்து வருகிறது. நேற்று மதியம் 2:30 மணிக்கு துவங்கி 3:30 வரை மழை பெய்தது. இதனால் கோவை சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் தாழ்வான இடங்களில் நீர் தேங்கியது. பூலுவபாளையம் மற்றும் அன்னுார் குளத்துக்கு மழை நீர் வரத்து அதிகரித்தது.
விவசாயிகள் கூறுகையில், ‘பல மாதங்களுக்கு பின், அன்னுார் வட்டாரத்தில் தற்போது மழை பெய்துள்ளது. கடந்த 14ம் தேதியும், இன்றும் (நேற்று) மழை பெய்துள்ளது. நிலக்கடலை, வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழையில்லாமல் காய்ந்து போயிருந்தன. தென்னை, பனை மரங்களும் கருகி வந்தன. தற்போதைய மழையால் பயிர்கள் உயிர் பிடிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
துணை வேளாண் அலுவலர் ராஜன் கூறுகையில், ‘‘கடந்த 14ம் தேதி 12 மி.மீ., அளவுக்கு, அன்னுார் வட்டாரத்தில் மழை பெய்தது. இன்றும் (நேற்று) மழை பெய்துள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றார்.