Politics
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம் த.வெ.க., – எம்.எல்.ஏ., ஆய்வு
வளசரவாக்கம்: வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அகத்தீஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குளத்தை சீரமைக்க, 2.93 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், குளத்தை சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியான நிலையில், மதுரவாயல் த.வெ.க., – எம்.எல்.ஏ., ரேவந்த் சரண் நேற்று ஆய்வு செய்தார்.
அகத்தீஸ்வரர் கோவில் 1,150 ஆண்டுகள் பழமையானது. நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகின்றன. இக்கோவில் குளத்தின் தற்போதைய நிலை குறித்து, நேற்று தான் எங்கள் கவனத்திற்கு வந்தது. உடனே, அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் மொபைல்போன் மூலம் பேசி, கோவிலின் நிலை குறித்து தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை அழைத்து, பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரரிடம் தெரிவித்துள்ளோம். அதற்குள் பணிகள் முடிக்காவிட்டால், தாமதத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.