வடமாநில இளைஞர்களை மிரட்டி செல்போன் பறிப்பு- கூண்டோடு தட்டித்தூக்கிய போலீஸ்

ஈரோட்டில் பட்டப்பகலில் வடமாநில இளைஞர்களிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஈரோட்டின் இந்திரா நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வரும் வட மாநில இளைஞர்கள் சிலர், தங்களின் தினசரி வேலைகளை முடித்துவிட்டுப் பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த உள்ளூர் இளைஞர்கள் அந்த வடமாநில இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி மிரட்டத் தொடங்கினர். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த வடமாநில இளைஞர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய அந்தக் கும்பல், அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் உடைமைகளைப் பட்டப்பகலிலேயே நடுரோட்டில் வைத்துப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டது.
இந்தத் துணிகர வழிப்பறிச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாகச் சோதனையை முடுக்கிவிட்டனர். வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளைச் சேகரித்து தீவிர ஆய்வு செய்தனர்.
போலீசார் தங்களின் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கேமரா பதிவுகளின் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் அடையாளங்களைத் துல்லியமாகக் கண்டறிந்தனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே, நகரின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாகப் பதுங்கியிருந்த ஒரு சிறார் உட்பட இரண்டு பேரை வளைத்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)