பஜ்ஜியால் பறிபோன சிறுமியின் உயிர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி.. போலீசார் விசாரணை.!

கடந்த 3 ஆம் தேதி தண்டலம் பகுதியில் உள்ள கடைசியில் சிறுமி பஜ்ஜி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
திருவள்ளூரில் பஜ்ஜி சாப்பிட்ட நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் லட்சிவாக்கத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், செங்குன்றம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். காவலரின் 9 வயது மகள் ஸ்ரீத்திகா என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 ஆம் தேதி தண்டலம் பகுதியில் உள்ள கடைசியில் சிறுமி பஜ்ஜி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனை அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறுமி ஸ்ரீத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியபாளையம் போலீசார் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பஜ்ஜி சாப்பிட்டதால் தான் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.
