Politics
நடிகர்கள் ரஜினி, சூர்யா, தனுஷ் மீது சமூக வலைதளங்களில் கடும் தாக்கு; த.வெ.க.,வினருக்கு கடிவாளம் போடுவாரா விஜய்?

சென்னை: நடிகர்கள் ரஜினி, தனுஷ் மற்றும் சூர்யாவை குறி வைத்து, த.வெ.க., - ஐ.டி., அணியினர் மற்றும் விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில், கடுமையாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
சமூக வலைதளங்களில், ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறும், அதே நேரத்தில், சினிமா ரசிகர்கள் சண்டைக்கும் பஞ்சமில்லை. அஜித், விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை, எல்லை கடந்து சென்றது. அஜித், நடிப்பை குறைத்த பின், அவரது ரசிகர்கள் அமைதியாகினர்.
விஜய் அரசியலுக்கு வந்த பின், அவரது ரசிகர்கள், அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி வந்தனர். தற்போது, அவர் ஆட்சியை கைப்பற்றி, தமிழக முதல்வரான நிலையில், அவரது ரசிகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை குறி வைத்து, தாக்கி வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, ஆட்சி மீது யாரேனும் விமர்சனம் செய்தால், மிக கேவலமாக தி.மு.க., - ஐ.டி., அணியினர் திட்டி தீர்ப்பர். அதே பாணியில், தற்போது த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், எல்லை மீறுகின்றனர்.
முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோர், ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளதால், அவர்களால், வருங்காலத்தில் பிரச்னை வந்துவிடக் கூடாது என, த.வெ.க., நினைப்பது போல தெரிகிறது.
இதனால், அவர்கள் மீதான தாக்குதலை, த.வெ.க., - ஐ.டி., அணியினர் மற்றும் விஜய் ரசிகர்கள், மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
நடிகர்களின் குடும்பத்தினர், பெண்களை குறிவைத்தும், தனிப்பட்ட விவகாரங்களில் சந்தேகத்தை எழுப்பியும், விவாதத்துக்கு உள்ளாக்குகின்றனர்.
சமூக வலைதளங்களில் நடக்கும் இந்த தாக்குதல் பெரும்பாலும் போலி கணக்குகள் வழியே நடக்கிறது. இதனால், புகார்கள் கொடுத்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
நடிகர்களும், வெளியில் சொல்ல தயங்குகின்றனர். எனவே, த.வெ.க., - ஐ.டி., அணியினருக்கும், ரசிகர்களுக்கும் முதல்வர் விஜய் கடிவாளம் போட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.