ஆம்புலன்ஸில் சென்றவரை இறக்கி தாக்கிய தந்தை, மகன்கள் கைது
மேட்டூர்:சேலம் மாவட்டம் மேச்சேரி, தெத்திகிரிப்பட்டி, கச்சராயனுாரை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 28. அருகே உள்ள, எறகுண்டபட்டி, செங்குட்டை திட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி நடேசன், 60. அவரது மகன்கள் குமார், 38, சக்திவேல், 32, சந்திரன், 28, ராஜா, 35. இருபது நாட்களுக்கு முன் சதீஷ்குமார், எறகுண்டபட்டி, சின்னேரிகாட்டில் வசிக்கும் உறவினர் துர்காவை பார்க்க சென்றார். அப்போது சதீஷ்குமார், துாரத்து உறவினரான நடேசன் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரையும் துர்கா சமாதானப்படுத்தி அனுப்பினார்.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு சின்னேரிகாட்டு பிரிவு சாலையில் சதீஷ்குமார், நடேசன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த நடேசன் மகன்கள் குமார், சக்திவேல், சந்திரன், ராஜா ஆகியோர், கல்லால் சதீஷ்குமார் கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தினர். துர்கா, சதீஷ்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றி, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.ஆனால் நடேசன் உள்ளிட்டோர், மேச்சேரி, கோவில்மேடு அருகே ஆம்புலன்ைஸ வழிமறித்து நிறுத்தி, சதீஷ்குமாரை இறக்கி மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். மக்கள் திரண்டதால், நடேசன் குடும்பத்தினர் தப்பினர். மக்கள், சதீஷ்குமாரை அதே ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். மேச்சேரி போலீசார் விசாரித்து, நடேசன், குமார், சக்திவேல், சந்திரன், ராஜாவை கைது செய்தனர்.