இது தான் பராமரிப்பு லட்சணமா? கழன்று தொங்கும் தெருவிளக்குகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருட்செல்வர் ரோட்டில், தெருவிளக்குகள் பராமரிப்பின்றி எரியாததால், இரவு நேரத்தில் மக்கள் இருளில் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி அருட்செல்வர் மகாலிங்கம் இணைப்பு ரோடு வழியாக, உடுமலை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், உள்ளூர் வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இந்த ரோட்டில், தெருவிளக்குகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகரில், முக்கிய வழித்தடமான அருட்செல்வர் மகாலிங்கம் சாலையில் தெருவிளக்குள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன. பல இடங்களில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாக மாறியுள்ளன.
போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டுமென, பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், விபத்துகள் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மக்கள் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதுபோன்று, அருட்செல்வர் மகாலிங்கம் சாலையிலும், தெருவிளக்கு பராமரிப்பின்றி கழன்று தொங்குகிறது.
எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் நிலை உள்ளது. தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.