Crime, law and justice
அரிவாளால் வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே என்.கோவில்பட்டியில் பதுங்கியிருந்த ரவுடியை போலீசார் பிடிக்க சென்றபோது எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து போலீசார் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சின்னாளபட்டி அருகே சிக்கனன்பட்டியை சேர்ந்தவர் ரவுடி ராஜா 54. 2013ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார்.
கொலை வழக்கில் தனக்கு எதிரான சாட்சி அளித்தவர்களை ராஜா மிரட்டுவதாக திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு புகார் வந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில் தனிப்படை போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவரது தாய் ஊரான வத்தலக்குண்டு அருகே என்.கோவில்பட்டியில் உள்ள தோட்டத்தில் ராஜா பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து எஸ்.ஐ., அருண்பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று ராஜாவை சுற்றி வளைத்தனர். அப்போது ராஜா அரிவாளால் தாக்கியதில் எஸ்.ஐ., அருண்பிரசாத் இடது கையில் வெட்டு விழுந்தது. உடனே எஸ்.ஐ., தன்னை தற்காத்து கொள்ள ராஜாவின் முழங்காலிற்கு கீழ் துப்பாக்கியால் சுட்டார்.
இதையடுத்து காயமடைந்த எஸ்.ஐ., அருண்பிரசாத், ரவுடி ராஜா இருவரும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எஸ்.பி.,ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜா மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே ரவுடி ராஜா போலீசாரை மிரட்டும் வீடியோவும் வெளியாகி உள்ளது.