Economy, business and finance
ஆடைகள் விற்பனையில் அசத்தும் V2 ரீடெயில்... முதலீட்டுக்கு கவனிக்கலாமா?

நடுத்தர வருமானம் கொண்ட மற்றும் புதிதாக உருவாகி வரும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை முக்கிய வாடிக்கையாளர் பிரிவாகக் கொண்டு, நியாயமான விலையில் ஆடைகள் மற்றும் வாழ்வியல் பொருள்களை வழங்குவது நிறுவனத்தின் முக்கிய வணிகச் செயல்பாடாக உள்ளது. - கம்பெனி பயோடேட்டா
எல்லா காலகட்டங்களிலும் பளிச்சிடும் சில துறைகளில் ஆடை விற்பனையும் ஒன்று. இதில் சில்லறை வணிகத் துறையில் வேகமாக வளர்ச்சி காணும் வரும் சில நிறுவனங்களில் வி2 ரீடெயில் லிமிடெட் (V2 Retail Limited: NSE Symbol: V2RETAIL, BSE Code: 532867) நிறுவனம் குறிப்பிடத்தக்கது. ஆடை மற்றும் ஆயத்த ஆடை விற்பனையை மையமாகக் கொண்ட சில்லறை வணிகத் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது.
நடுத்தர வருமானம் கொண்ட மற்றும் புதிதாக உருவாகி வரும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை முக்கிய வாடிக்கையாளர் பிரிவாகக் கொண்டு, நியாயமான விலையில் ஆடைகள் மற்றும் வாழ்வியல் பொருள்களை வழங்குவது நிறுவனத்தின் முக்கிய வணிகச் செயல்பாடாக உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகிய இரு பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப் பட்டுள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சி!
1994-ம் ஆண்டு கொல்கத்தாவில் தனது சில்லறை வணிகத்தில் தொழில் பயணத்தைத் தொடங்கியது. தொடர்ந்து, 2001-ம் ஆண்டில், வாடிக்கையாளர்களுக்கு விலை மற்றும் பொருளின் மதிப்புக்கு ஏற்ற தேர்வு களை வழங்கும் ‘வேல்யூ ரீடெய்லிங்’ அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு சில்லறை வணிகம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விஷால் மெகாமார்ட் லிமிடெட் (Vishal Megamart Limited) என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. 2007- ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
கடன் சார்ந்த அதிவேக விரிவாக்கம் மற்றும் 2008-09 காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் நிறுவனத்திற்கு செயல்பாட்டு இழப்புகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2011-ம் ஆண்டில் ‘விஷால்’ என்ற வணிகப் பெயரும் அதனுடன் தொடர்புடைய வணிகமும் விற்கப்பட்டது. பின்னர் நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டு ‘வி2 ரீடெயில் லிமிடெட்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. மறுசீரமைப்புக்குப் பிறகு, நிறுவனத்தின் முதல் வி2 சில்லறை விற்பனை நிலையம் 2012-ம் ஆண்டில் ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்டது.
வணிகச் செயல்பாடு!
பெருநகரங்களுக்கு அப்பால், இரண்டாம் நிலை (Tier-II), மூன்றாம் நிலை (Tier-III) மற்றும் நான்காம் நிலை (Tier-IV) நகரங்களில் உள்ள நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர் களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு வகையான ஆடைகளை நியாயமான விலையில் வழங்குவது இதன் வணிக அணுகுமுறையாக உள்ளது.
ஆடைகளின் வடிவமைப்பு, தரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு ஆகியவற்றில் அதிக அளவிலான கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக, ‘வி2 ஸ்மார்ட் மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட்’ (V2 Smart Manufacturing Private Limited) என்ற முழுமையான துணை நிறுவனத்தையும் (wholly owned subsidiary) வி2 ரீடெய்ல் நிறுவனம் கொண்டுள்ளது.
வி2 ரீடெயில் நிறுவனத்தின் விற்பனை நிலையங் களில் குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்குத் தேவையான ஆடைகள் மற்றும் சில அத்தியாவசிய வாழ்வியல் பொருள்கள் ஒரே கூரையின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. கடைகளில் பல்வேறு ஆடை வடிவமைப்புத் தேர்வுகளை வழங்குவதிலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. மேலும், காட்ஸ்பீட் (Godspeed), ஹெர்லிச் (Herrlich), கிளமோரா (Glamora), எபெல்லியா (Ebellia) மற்றும் ஹனி பிராட்ஸ் (Honey Brats) போன்ற சொந்த பிராண்டுகளின் கீழும் ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேரடி சில்லறை விற்பனை நிலையங்களுக்குக் கூடுதலாக, நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையதளமான v2kart மூலமாகவும் ஆன்லைன் வர்த்தகச் சேவை வழங்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டின் இறுதியில் வி2 ரீடெ நிறுவனத்தின் மொத்த வருவாயில் ஆண்களுக்கான ஆடைப் பிரிவு முக்கியப் பங்கைக் (41%) கொண்டிருந்தது. இந்தப் பிரிவில் பல்வேறு வகையான ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலாடைகள் மற்றும் கால்சட்டைகள் பிரிவில் டி-ஷர்ட்டுகள், சட்டைகள், ஜீன்ஸ் மற்றும் டிரவுசர்கள் இடம்பெறுகின்றன.
அலுவலக மற்றும் சாதாரண உடைகள் பிரிவில் தினசரி பயன்பாட்டுக்கான கேஷுவல் ஆடைகளும், அலுவலகம் மற்றும் பிற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய ஃபார்மல் உடைகளும் இடம்பெறுகின்றன. விழாக்கால ஆடைகள் பிரிவில் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் அணியக் கூடிய ஆடைகள் வழங்கப்படுகின்றன. இதனுடன், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கான ஸ்போர்ட்ஸ்வேர் (Sportswear) மற்றும் குளிர்கால வின்டர் வேர் (Winter wear) ஆகியவையும் ஆண்களுக் கான ஆடைப் பிரிவில் இடம்பெறுகின்றன. இந்த ஆடை ரகங்கள் நிறுவனத்தின் சொந்த பிராண்டுகளான காட்ஸ்பீட் (Godspeed) மற்றும் ஹெர்லிச் (Herrlich) ஆகியவற்றின் கீழ் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
பெண்களுக்கான ஆடைப் பிரிவு!
கடந்த நிதியாண்டின் இறுதியில் வி2 ரீடெயில் நிறுவனத்தின் பெண்களுக்கான ஆடைப் பிரிவு, நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 28% பங்களிப்பைக் கொண்டிருந்தது. நுகர்வோரின் மாறி வரும் விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகள் இந்தப் பிரிவில் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான ஆடைப் பிரிவில் பாரம்பர்ய, மேலைநாட்டு ஆடைகள் இடம்பெறுகின்றன. மேலும், தினசரி பயன்பாட்டுக்கான பல்வேறு வகையான ஆடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
கல்லூரி மற்றும் பணிச்சூழலுக்கான உடைகள், பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கான விழாக்கால ஆடைகள் ஆகியவையும் இந்தப் பிரிவில் இடம்பெறுகின்றன. பருவகாலத் தேவைகளுக்கேற்ப வின்டர் வேர் மற்றும் விளையாட்டு / உடற்பயிற்சி ஆடைகள் ஆகியவையும் வழங்கப் படுகின்றன. பெண்களுக்கான ஆடைப் பிரிவில் நிறுவனம் இரண்டு முக்கிய சொந்த பிராண்டுகளின் கீழ் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. கிளமோரா (Glamora) பிராண்ட் பாரம்பர்ய ஆடைகள், ஃபியூஷன் டிசைன்கள் மற்றும் தற்போதைய ட்ரெண்டுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஃபேஷன் ஆடைகளைக் கொண்டுள்ளது. எபெல்லியா (Ebellia) பிராண்ட் தினசரி பயன்பாடு, பணிச்சூழல் மற்றும் குடும்ப நிகழ்வு களுக்கு அணியக்கூடிய ஆடைகளை உள்ளடக்கியது.
குழந்தைகளுக்கான ஆடைப் பிரிவு!
கடந்த நிதியாண்டின் இறுதியில் வி2 ரீடெயில் நிறுவனத்தின் மொத்த ஆடை விற்பனையில் குழந்தைகளுக்கான பிரிவு சுமார் 23% பங்களிப்பைக் கொண்டிருந்தது. இந்தப் பிரிவில் சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் கைக்குழந்தைகள் ஆகியோருக்கான ஆடைகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் தினசரி பயன்பாட்டிற்கான கேஷுவல் ஆடைகள், பள்ளித் தேவைகளுக்கான ஆடைகள் மற்றும் குளிர்காலத்திற்கான வின்டர் வேர் ஆகியவை முக்கியமான தயாரிப்பு வகைகளாக உள்ளன.
குழந்தைகளுக்கான ஆடைகள் நிறுவனத்தின் சொந்த பிராண்டான ஹனி பிராட்ஸ் (Honey Brats) என்ற பெயரில் விற்பனை செய்யப் படுகின்றன.
மற்றும் காலணிகள் (Footwear), ஆண்களுக்கான வாலெட்டுகள் (Wallets), சன்கிளாஸ்கள் (Sunglasses), பெண்களுக்கான கைப்பைகள் (Ladies purses / Handbags), நறுமணத் திரவியங்கள் (Deodorants) மற்றும் பிற சிறிய துணைப் பொருள்களும் இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் ஆடை அல்லாத இந்தப் பொருள்களின் பங்களிப்பு சுமார் 7% ஆக இருந்தது.
விற்பனை நிலையங்களின் நெட்வொர்க்!
வி2 ரீடெயில் நிறுவனம் பல்வேறு இந்திய மாநிலங்களில் சில்லறை விற்பனை நிலையங்களை இயக்கி வருகிறது. ஆரம்பத்தில் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா போன்ற கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களை முக்கிய சந்தைகளாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம், பின்னர் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் (நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதி நிலவரப்படி), இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 380-க்கும் மேற்பட்ட ‘வி2’ சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனை நிலையங்கள் மொத்தமாக சுமார் 40 லட்சம் சதுர அடி சில்லறை விற்பனைப் பரப்பளவைக் கொண்டுள்ளன.
வணிகச் செயல்பாடுகளின் அளவுக்கு ஏற்ப, வி2 ரீடெயில் நிறுவனம் பெருநிறுவன அலுவலகம், விநியோக மையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
நிறுவனம் எதிர்கொள்ளும் ரிஸ்க்குகள்!
ஆடை மற்றும் ஆயத்த ஆடை விற்பனையை மையமாகக் கொண்ட சில்லறை வணிகத் துறையில் செயல் படும் நிறுவனங்கள் அனைத்துக்கும் உண்டான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம்.
விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கும்போது, அதற்கேற்ற பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வதில் சவால்கள் ஏற்படலாம். அதேபோல், தேவையான எண்ணிக்கை யில் தகுதியான ஊழியர்களை நியமித்து, அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே சீரான செயல் பாட்டுத் தரத்தைப் பராமரிப்பதும் ஒரு சவாலாக இருக்கலாம்.
விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, புதிய ஆடை ரகங்கள் கடைகளில் உரிய நேரத்தில் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இதேபோல், நூல் மற்றும் துணிகளின் விலை உயர்வு போன்ற மூலப்பொருள் செலவு அதிகரிப்புகள் நிறுவனத்தின் லாப வரம்புகளை பாதிக்கக்கூடும். விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதிக அளவிலான சரக்குகளை வைத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான மூலதனத் தேவையும் அதிகரிக்கும். எனவே, சரக்குகள் மற்றும் பணப்புழக்கத்தை முறையாக நிர்வகிப்பது முக்கியமாகிறது.
சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி பணியில் இருந்து விலகினால், கடைகளின் செயல்பாடுகளையும் வாடிக்கையாளர் சேவையையும் சீராகப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், தகவல் தொழில்நுட்ப அமைப்பு களை சார்ந்து செயல்படுவதால், தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் நிறுவனத்திற்கு உள்ளன.
இதனுடன், இந்திய சில்லறை வணிகத் துறையில் சுமார் 65% இன்னும் ஒருங்கிணைக்கப்படாத துறையாக இருப்பதும் நிறுவனத்தின் செயல்பாட்டு சூழலின் ஒரு பகுதியாக உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வணிகத் துறையில் உள்ள பிற நிறுவனங்களின் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில், நுகர்வோரின் ஆடை விருப்பங்கள் தொடர்ந்து மாறக்கூடிய நிலையில், அதற்கேற்ப தயாரிப்பு வடிவமைப்புகளில் மாற்றங்களை மேற் கொள்வதும் நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டில் முக்கியமானதாக உள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. எனவே, முதலீடு செய்யும் முன் தொடர்புடைய ஆவணங்களை கவன மாகப் படிக்கவும். இந்தப் பகுதியானது பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இதன் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கையும் வாங்கும் முன் செபி பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்து ஆலோசித்து, அப்பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின், முதலீட்டு நடவடிக்கைகளை எடுப்பது நல்லது!
