Politics
“எங்கள் முன்னோரின் இடம் எங்களுக்கு வேண்டும்!”

புதிய தலைமை செயலகத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
பட்டினப்பாக்கத்தில் தனது வீட்டுக்கு எதிரே கடலைப் பார்த்தபடி புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் விஜய் திட்டமிட, அந்தத் திட்டத்துக்கு எதிராக பட்டினப்பாக்கம் மீனவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே, நில உரிமை, வாழ்வாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதற்கு எதிர்ப்பு வலுத்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் பாரதி, “புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு தேர்வுசெய்திருக்கும் 25.55 ஏக்கரில் பெரும்பாலான பகுதி முள்ளிக்குப்பம், முள்ளிமான் நகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது. குடிசைகளில் வாழ்ந்த எங்கள் முன்னோரிடம், 1957-ம் ஆண்டு ‘வீடுகள் கட்டித்தருகிறோம்’ எனக் கூறி அந்த இடத்தைக் காலிசெய்ய வைத்தனர். பல மீனவ கிராம மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தும் வகையில் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், தொழில்ரீதியாகப் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அந்த வீடுகளில் நாங்கள் குடியேறவில்லை. பின்னர் அருகிலிருந்த புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
சுனாமியின்போது நாங்கள் குடியேறிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1957-ல் எங்கள் முன்னோர் இருந்த அதே இடத்தில் மீண்டும் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனப் பல ஆண்டுகளாக அரசுகளிடம் கோரி வருகிறோம். த.வெ.க அமைச்சர் வெங்கட்ரமணன் வாக்கு கேட்டு வந்தபோதுகூட, ‘உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்’ என்று உறுதியளித்தார். ஆனால், இப்போது அவரிடம் கேட்டால், அவமதிக்கும் வகையில் பேசுகிறார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறோம். அதன் பிறகும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான இடம் எங்களுக்கே வேண்டும். அதற்காக எண்ணூர் முதல் நயினார்குப்பம் வரையுள்ள 50 மீனவ கிராமங்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்” என்றார்.
தலைமைச் செயலகம் அமையவிருக்கும் பகுதியைச் சுற்றியிருக்கும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “பட்டினப்பாக்கம் லூப் ரோடு, சாந்தோம் ஹைரோடு ஆகிய இரு சாலைகளும் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகள். சுற்றிலும் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனப் போக்குவரத்து உள்ளிட்டவற்றால் சாமானிய மக்களுக்குத்தான் பெரும் சிரமம் ஏற்படும்” என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
“ஒருபுறம் முதல்வரின் வீடு, மறுபுறம் கடல் என அமைய வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனைப்படி, இந்த இடத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டித்தீருவேன் என முதல்வர் அடம்பிடித்தால், அது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதையாகிவிடும்” என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.
