பயங்கரவாதி விவகாரத்தில் பாகிஸ்தான் போடும் வெற்று நாடகம்: மத்திய அரசு விமர்சனம்

புதுடில்லி: ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 70 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு, 'நாடகம்' என, மத்திய அரசு விமர்சித்துள்ளது.
டில்லியில் 2001 பார்லிமென்ட் தாக்குதல் முதல், கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வரை பல வழக்குகளில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது.
இவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவி வருவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிதியுதவிகளை பெறுவதில் பாகிஸ்தானுக்கு சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், 'பயங்கரவாதி மசூத் அசார் பற்றி தகவல் தருபவர்களுக்கு 70 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, பாகிஸ்தானின் உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
இது குறித்து நம் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு நாடு அவர்களை கைது செய்ய தகவல் தருபவருக்கு பரிசு அறிவிப்பது வெற்று நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரியும்.
பாகிஸ்தான் இது போன்ற நாடகங்களையும், உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளையும் ஏற்கனவே பலமுறை செய்துள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக எந்தப் பயனும் இல்லாத அறிவிப்புகளை வெளியிடுவதில் அர்த்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.