கள்ளப்படகில் இலங்கை சென்ற அகதிகள் சிக்கினர்: கோட்டை விட்ட பாதுகாப்பு படை

ராமேஸ்வரம்: - ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கை சென்ற 11 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.
1984 முதல் இலங்கையில் ஏற்பட்ட போரால் அங்குள்ள தமிழர்கள் ஏராளமானோர் அகதியாக ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள பல முகாம்களில் தங்கி உள்ளனர். தற்போது இலங்கையில் அமைதி திரும்பியதால், அகதிகள் சிலர் விமான மூலமும், கள்ளத்தனமாக படகிலும் அங்கு திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மண்டபம் தெற்கு கடற்கரையில் நிறுத்தி இருந்த ஒரு பைபர் கிளாஸ் படகை திருடிக் கொண்டு இலங்கை அகதிகள் 11 பேர் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை மன்னார் நோக்கி சென்றனர். அன்றிரவு நடுக்கடலில் ரோந்து சுற்றிய இலங்கை கடற்படை வீரர்கள் சந்தேகத்துக்குரிய இப்படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 11 அகதிகளையும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி முகாமில் தங்கி இருந்தவர்கள். இவர்கள் இலங்கைக்கு செல்ல ஏஜன்டாக இருந்தவர்கள் யார் என மத்திய, மாநில உளவுதுறை போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களை நம் பாதுகாப்பு படையினர் கைது செய்ய முடியாமல் கோட்டை விட்ட செயல் தனுஷ்கோடி கடல்வழி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.