மழையின் கண்ணாமூச்சி விளையாட்டு குலை தள்ளும் நேரத்தில் வினையாச்சு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக உள்ளது வாழை விவசாயம். அறுவடை செய்யப்படும் வாழை, உள்ளூர் தேவைகளுக்கு போக, கேரளாவுக்கும் அனுப்பப்படுகின்றன. பருவமழை பொய்த்ததால், வாழைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:
மழை இல்லாததால், நீரை விலைக்கு வாங்கி வாழைகளுக்கு ஊற்றி வந்தனர். அதுவும் கட்டுப்படி ஆகாததால், வாழைகளை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். இந்த வறட்சிக் காலத்தை பேரிடராக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதற்காக ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து, விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி, ஆய்வு செய்து, தேவையான நிதி உதவிகளை செய்ய வேண்டும். மேட்டுப்பாளையம் தாலுகாவில் மட்டும் சுமார் 1 லட்சம் வாழைகள், நீரின்றி காய்ந்துள்ளன,’’ என்றார்.
குறைந்தது பரப்பளவு காரமடை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியதாவது:
காரமடை வட்டாரத்தில், சுமார் 400 முதல் 450 எக்டேரில் வாழைகள் பயிரிட்டு வந்த நிலையில், வறட்சி காரணமாக, தற்போது 250 முதல் 300 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி, வாழைகளை காப்பாற்றலாம். நிலத்தடி நீரும் குறைந்து வருவதால், வாழைகள், அதற்கான அறுவடை காலம் வரும் முன்பே, சிப்ஸ் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக் கொள்ள வியாபாரிகளை அணுகி வருகின்றனர்,’’ என்றார்.