Politics
உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? ஆண்டிற்கு ரூ.27 கோடி அறிவிப்பு!

இதர அமைச்சர்களின் சம்பளம் அவர்களின் சீனியாரிட்டி மற்றும் துறைசார் பொறுப்புகளுக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சிங்கப்பூர் அரசு தனது அரசியல் தலைவர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே உலகின் மிக உயர்ந்த அமைச்சரவைச் சம்பளங்களைக் கொண்டுள்ள சிங்கப்பூரில், இந்த புதிய திருத்தத்தின் மூலம் அதன் அளவு மேலும் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த சம்பள உயர்வுத் திருத்தத்தின்படி, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அடிப்படை ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து (சுமார் ரூ. 16.55 கோடி) 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (சுமார் ரூ. 27.08 கோடி) உயர்ந்துள்ளது. மேலும், துணைப் பிரதமரின் சம்பளம் 1.87 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து (சுமார் ரூ. 14.07 கோடி) 3.06 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (சுமார் ரூ. 23.02 கோடி) உயர்த்தப்பட்டுள்ளது.
இதர அமைச்சர்களின் சம்பளம் அவர்களின் சீனியாரிட்டி மற்றும் துறைசார் பொறுப்புகளுக்கு ஏற்ப 1.80 மில்லியன் சிங்கப்பூர் டாலர் முதல் 2.88 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை (சுமார் ரூ. 13.54 கோடி முதல் ரூ. 21.66 கோடி வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பள உயர்வின் மூலமாகத் தனக்குக் கிடைக்கும் கூடுதல் தொகையான சுமார் ரூ. 10.53 கோடியைத் தன் பதவிக் காலத்தில் தகுதியான நல்ல காரியங்களுக்கு முழுமையாகத் தானமாக வழங்கப் போவதாகப் பிரதமர் வோங் அறிவித்துள்ளார்.
ஊழலற்ற மற்றும் திறமையான ஆட்சியை உறுதிப்படுத்தவும், சிறந்த தலைவர்களை ஈர்க்கவும் இத்தகைய உயர்தரச் சம்பளங்கள் அவசியமானவை என்று சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே, சாதாரண குடிமக்களின் வருமானத்தை விட அமைச்சர்களின் வருமானம் பல மடங்கு அதிகமாக இருப்பதால், அரசியல் ரீதியாக இது மிகுந்த உணர்ச்சிகரமான மற்றும் விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பிரதமர் வோங், பொதுமக்களின் தீவிரமான ஆராய்வையும், அவர்களின் உணர்வுகளையும் தான் முழுமையாகப் புரிந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தரமான அரசியல் தலைமை தொடர்வதை உறுதி செய்வதே இந்த முடிவின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த சம்பள மாற்றங்கள் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
