564 மனைகளை விற்க வீட்டு வசதி வாரியம் தயார்

சென்னை: வீட்டு வசதி வாரிய திட்டங்களில், வீடு வாங்குவதை காட்டிலும், மனை வாங்க, மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
இது குறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை விட, மனைப்பிரிவு திட்டங்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இதனால், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கடலுார், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில், புதிதாக மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த மாவட்டங்களில், இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 564 மனைகள் அடங்கிய திட்டங்கள், 45 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கும் பணிகள், விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.