Politics
“பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்; பூர்வகுடி மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்” – ஜெயக்குமார்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதால் பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; “பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் அங்கு பூர்வகுடிகளாக வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். பட்டினப்பாக்கம் ஒட்டியுள்ள சாந்தோம் நெடுஞ்சாலையில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. Peak hours-இல் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவினை அரசு கைவிட்டு, அதற்கு பதிலாக சென்னைக்கு வெளியே துணைக்கோள் நகரம் அமைத்து அதனுள் தலைமைச் செயலகம், அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள், அமைச்சர்கள் பங்களா என ஒருங்கிணைந்த வளாகமாக அமைக்கலாம்.
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது மின்வெட்டு ஏற்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது மின்வெட்டு ஏற்படுகிறது. இது எல்லாம் தமிழகம் இதுவரை காணாத காட்சியாக உள்ளது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் பெற்று, மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். அந்த தொகுதிகளில் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
