Politics
மதுரை த.வெ.க. டமால்! -நிர்மல் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தேர்தல் தோல்விக்கு பிறகு தங்களது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தத் தொடங்கியிருக்கும் நேரத்தில், ஆளும் த.வெ.க. அரசின் கட்சிக் கட்டமைப்பில் விரிசல் விழத் தொடங்கியிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிர்மல்குமார் மதுரை மாவட்ட பொறுப்பாளராக வந்தபின்பு பெரிய விரிசல் விழத்தொடங்கியுள்ளது. த.வெ.க.வை பொறுத்தவரை ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விகிதத்தில் மதுரையிலுள்ள 10 மாவட்டச் செயலாளர்களில், தற்போது மதுரை வடக்கு கல்லாணை, மதுரை மேற்கு தங்கபாண்டியன், மதுரை கிழக்கு கார்த்திகேயன், திருப்பரங்குன்றம் மருது, மதுரை மத்தி முஸ்தபா, சோழவந்தான் கருப்பையா, உசிலம்பட்டி விஜய் மகாலிங்கம், மேலூர் விஷால் என 8 பேர் மட்டுமே போடப்பட்டுள்ளனர். திருமங்கலம், மதுரை தெற்கு ஆகியவற்றில் இன்னும் மாவட்ட செயலாளர்களை நியமிக்கவில்லை. இந்நிலையில் மதுரையில் காலங்காலமாக விஜய் என்றாலே மதுரையின் முகமாகப் பார்க்கப்படுவது கல்லாணை மற்றும் தங்கபாண்டியன்தான். இவர்கள் இருவரும் விஜய்யின் முதல் படத்திலிருந்து போஸ்டர் ஒட்டி, விஜய் பிறந்த நாளுக்கு அன்னதானம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து, விஜய்யை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தவர்கள் என்பதால், விஜய் கட்சி ஆரம்பித்ததும் தொண் டர்கள் பெருமளவில் குவியத் தொடங்கினர், இவர்களின் செல்வாக்கும் பெருகியது.
இந்நிலையில் மதுரை முதல் மாநாட்டில் இந்த இருவரின் பங்களிப்பும் மிக முக்கிய மாகப் பார்க்கப்பட்ட நிலையில், 2026 தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றதும் அமைச்சர் லிஸ்டில் இருவருமே இடம்பெற வாய்ப்புள்ளது என்று மதுரை த.வெ.க.வின ரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத நிர்மல்குமா ருக்கும், காங்கிரஸின் விஸ்வநாதனுக்கும் வழங் கப்பட, விஜய்யின் ஆரம்பகால ரசிகர்களாகிய தற்போதைய நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரையில் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர் களுக்கு பொறுப்பாளராக நிர்மல்குமாரை நியமித்தது முதலே மதுரை த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் பெரிய அளவில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது. அதே சமயம், அமைச்சர் நிர்மல்குமாரின் செயல்பாடுகள், சொந்த கட்சியிலேயே பெரும்பான்மையினர் மத்தியில் அதிருப்தியையும், கடுமையான எதிர்ப்பையும் கிளப்பத் தொடங்கியுள்ளது.
மதுரை த.வெ.க.வில் என்னதான் நடக்கிறது என்று விசாரிக்கையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர்,
"சார் நாங்க யார் பக்கமும் இல்லை. கட்சிக்கு யார் நன்மை செய்தாலும் அவர்கள் பக்கம் இருப்போம். இந்த நிர்மல்குமார் யார் சார்? எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போன்று சங்கி தானோ என்ற சந்தேகம் எங்க ளுக்கு இருக்கு. பக்கா ஆர்.எஸ்.எஸ்.காரர். அடுத்து பா.ஜ.க.வில் ஐ.டி. விங்கில் இருந்தவர் என்கிறார்கள். இவர் கட்சியை ஒற்றுமைப் படுத்துவதற்கு பதில் கட்சியை இரண்டாக உடைத்துவிடுவார் போல இருக்கு. அடுத்து அ.தி.மு.க.விலிருந்து இங்கு தாவியவர், ஏதோ அழுத்தம் காரணமாக இவரை கட்சி அமைச்ச ராக்கியது மட்டுமல்லாமல், மொத்த மதுரை மாவட்டத்திற்கும் பொறுப்பாளராகப் போட்டது கட்சியை அழிக்கத் தான். தற்போது நிர்மலின் காய் நகர்த்தலோ கட்சிக்குள் கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் விஜய் ரசிகர்களாக இருந்து பதவிகளில் இருக்கிறார் களோ, அவர்களையெல்லாம் ஓரங்கட்டத் தொடங்கியது தான் இவரோட வேலையாக இருக் கிறது. அதில் முதன்மையாக மதுரையில் விஜயின் முகமாக தொண்டர்களால் பார்க்கப்பட்ட கல்லாணையையும், தங்கபாண்டியனையும் தான். இவர்களுக்கு பதிலாக, பா.ஜ.க., அ.தி.மு.க.வி லிருந்து வந்த டாக்டர் சரவணனையும் தி.மு.க. விலிருந்து வந்தவரும், நிர்மலின் ஆரம்பகால நண்பருமான கார்த்திகேயனையும் வளர்த்து விடத் தொடங்கியிருக்கிறார். மேலும், டாக்டர் சரவணனை திருமங்கலம் தொகுதி மாவட்ட செயலாளராக கொண்டுவர டீலிங் தொடங்கியிருக்கு.
நிர்மல் தன் போக்கிற்கு மதுரையில் விஜய் ரசிகராக இருந்து பதவியிலிருப்பவர்களை ஓரங்கட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், தற்போது கட்சிக்குள் நிர்மலுக்கு எதிராக விஜய் ரசிகர் மன்றத்தி லிருந்து இருக்கும் த.வெ.க. நிர்வாகிகள் ஒரு அணியாகவும், நிர்மல் உருவாக்கிய புதிய பொறுப்பாளர்கள் ஒரு அணியாகவும் செயல் படத் தொடங்கியுள்ளனர். அதில் அமைச்சர் நிர்மல்குமாரின் விசுவாசிகளாக இருப்பவர்கள் சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, கிழக்கு தொகுதி கார்த்திகேயன், மதுரை முஸ்தபா மட்டுமே. மதுரை தெற்கு எம்.எல்.ஏ. கோபிசன் கட்சித்தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்கிறார், எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறார் என்றே பார்க்கிறேன். இருந்தாலும் இவர்களை நிர்மல்குமாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். இவர்கள் ஒரு அணியாகவும், கல்லாணை மற்றும் தங்க பாண்டி யன், திருப்பரங்குன்றம் மருது, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய் மகாலிங்கம், மேலூர் விஷால் ஆகியோர் ஒரு அணியாகவும் செயல்படுகின்ற னர். இவர்கள் அனைவருமே ஆரம்பகால விஜய் ரசிகர்கள். இவர்கள் எல்லோரும் நிர்மலுக்கு எதிராக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு சாட்சியாக உசிலம்பட்டியில் விஜய் மகாலிங்கம் ஏற்பாட்டில் த.வெ.க. அரசின் 100வது நாள் சாதனை விழாவில் இந்த நால்வரின் பெயர்கள் மட்டுமே போட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு விஜய்யின் ஆரம்பகால ரசிகர்களாக இருந்து தற்போது நிர்வாகிகளாக இருப்பவர்கள் மட்டுமே கலந்துகொண்டு, மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் கறி விருந்து மற்றும் நலத்திட் டங்கள் எனத் தடபுடலாக நடந்தேறியது. இந்த போஸ்டரில் நிர்மல்குமார் பெயர் கூட இல்லை. நிர்மல்குமாருக்கு இந்த தகவல் சொல்லப்பட்டு, அவர் மேலும் கடுப்பாகி, கட்சியில் இனி எந்த ஒரு போஸ்டிங் போடவேண்டும் என்றாலும் பொறுப்பாளராகிய தன் பார்வைக்கு கொண்டுவராமல் போடக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோன்று, மதுரை மத்திய தொகுதி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முஸ்தபாவிற்கும் அந்த தொகுதிக்கும் சம்பந்தமே இல்லை: அவர் சென்னைக்காரர். மதுரைக்காரர் கூட இல்லை. இது மதுரை மத்திய தொகுதி. இந்த நியமனம், கட்சி வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் தனியாக கட்சி வைத்திருந்தவர். சீட்டிற் காக ஓடி வந்தவருக்கு சீட்டு கொடுத்தாலும் பரவா யில்லை, அந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லா மல் மாவட்ட செயலாளராக ஆக்கியிருப்பது எந்த வகையில் நியாயம்? அவர் வாரத்தில் பாதி நாட்கள் சென்னையில் தான் இருக்கிறார். அங்கு அவருக்கு கறி பிசினஸ் இருக்கிறது. இப்படிப் பட்டவர்கள் எப்படி கட்சிக்காக வேலை செய் வார்கள்? இதற்கெல் லாம் பின் புலம் நிர்மல்குமார் தான். தற் போது நீதிமன்றங்களில் நிரப் பப்பட்ட அரசு வழக்கறிஞர் கள் நியமனத்தில் கல்லானை யின் சிபாரிசையும், தங்க பாண்டியனின் சிபாரிசையும் எடுத்துக்கொள்ளாமல், அனைவருமே நிர்மல் குமாரின் ஆட்களாக இருக்கிறார்களாம். இது கல்லாணைக்கும், தங்கபாண்டியனுக்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று, இன்னும் மதுரையில் திருமங்கலம் மற்றும் மதுரை தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. அதிலும் நிர்மல்குமாரின் கையே ஓங்கினால் மதுரையில் த.வெ.க. இரண்டாக உடை யும் என்பதில் சந்தேகமில்லை. அவர் எல்லோ ரையும் அரவணைத்துச் செல்வதற்கு பதில், அடக்க நினைப்பது வருகிற உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் எதிரொலிக்கும். நிர்மல்குமார் நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராகவே த.வெ.க.வினர் வேலை செய்வார்கள் என்பது நிச்சயம். அப்படி நடந்தால் மொத்த மதுரை மாநகராட்சியையும் தி.மு.க.வே கைப்பற்றும் என்பது நிதர்சனம் என்கின்றனர் த.வெ.க. நிர்வாகிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)