சுனாமிக்கு பின் மன்னார் வளைகுடா கடலில் அதிசய மாற்றங்கள்: கடல் அரிப்பால் மீனவ கிராமங்களுக்கு பாதிப்பு

திருப்புல்லாணி: மன்னார் வளைகுடா கடலில் 2004 சுனாமிக்கு பிறகு அதிசயிக்கத்தக்க மாற்றங்களையும், பாதிப்புகளையும் கடற்கரையோர மீனவர் கிராமங்கள் சந்தித்துள்ளது. குறிப்பாக அதிக தென்னை மரங்கள், பனை மரங்கள் மற்றும் நிழல் தரும் மரங்கள் அதிகளவில் பேரலைகளின் தாக்கத்தால் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் முதல் சேதுக்கரை, கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மங்களேஸ்வரி நகர் முதல் மாரியூர், ஒப்பிலான், ரோஜ்மா நகர் வரை மண்ணரிப்பு மற்றும் பேரலைகளின் தாக்கத்தால் மரங்கள் மற்றும் நிலப் பகுதிகள் பாதிப்பை சந்தித்துள்ளன. காற்றின் வேகம், பேரலைகளின் தாக்கம், மண்ணரிப்பு பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கரைப்பகுதி தற்போது படிப்படியாக அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் புகுந்து வருகிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
முன்பு இருந்த கடற்கரை 100 முதல் 50 அடி துாரத்திற்கு கரையை நோக்கி ஆபத்தான முறையில் முன்னேறி வருகிறது. புயல் மற்றும் பருவ கால மாற்றங்களால் கடல் சீற்றம் அதிகரிப்பது வாடிக்கையாக இருந்தாலும் கடற்கரை பகுதியில் நடக்கும் சட்ட விரோத மணல் கடத்தலும் இதற்கு காரணம். இயற்கையாகவே அதிகளவு கடலில் நீரோட்டம் இருப்பதால் கடற்கரையோரம் மணல் அரிக்கப்படுகிறது.
கடற்கரையோரம் பனை, தென்னை மரங்கள் முன்பு மிகுதியாக வளர்ந்தது. இப்போது குறைந்து வருவதாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது முன்கூட்டியே நல்லது. எனவே வனத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் குழுவாக இயங்கி அரசுக்கு சொந்தமான இடங்களில் மண்ணரிப்பை தடுக்கும் வகையில் சவுக்கு, பனை மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றனர்.