டிப்ஸ் வாங்குவதில் தகராறு: பார் ஊழியர் அடித்து கொலை
அம்பத்துார்: 'குடி'மகன்களிடம் 'டிப்ஸ்' வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், சக ஊழியர் தாக்கியதில் சீனிவாசன், 50, என்ற மதுக்கூட ஊழியர், அடித்து கொலை செய்யப்பட்டார்.
அம்பத்துார், கள்ளிக்குப்பம் அடுத்த சூரப்பட்டு, சிவபிரகாசம் நகரில், தனியார் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. அதன் ஊழியரான, ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசன், 50, தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில், மதுக்கூடத்தில் நேற்று இறந்து கிடந்தார்.
தகவலறிந்து சென்ற புதுார் இன்ஸ்பெக்டர் சடையாண்டி மற்றும் போலீசார், சீனிவாசனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், அதே மதுக்கூடத்தில் பணியாற்றும் சசிகுமார், 39, என்பவர், இரும்பு நாற்காலியால் தாக்கி, சீனிவாசனை கொன்றது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
மதுக்கூடத்தில், 'குடி'மகன்களிடம் 'டிப்ஸ்' வாங்குவதில், சீனிவாசன், சசிகுமார் இடையே போட்டி இருந்துள்ளது.
சில நாட்களாக, சீனிவாசன் கவனிக்கும் 'குடி'மகன்களிடம், சசிகுமார் டிப்ஸ் வாங்கியுள்ளார். இதனால், நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து சசிகுமாரை தாக்கினார். பதிலுக்கு சசிகுமார், இரும்பு நாற்காலியை எடுத்து, சீனிவாசனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன், மயங்கி விழுந்து இறந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.