நகை வியாபாரி வீட்டில் ரூ.2.25 கோடி தங்கம் திருட்டு
துமகூரு: மகனின் திருமணத்துக்கு சென்றிருந்த தங்க நகைக்கடை வியாபாரியின் வீட்டில், 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் லட்சுமண் கணபத். இவர் பல ஆண்டுகளாக, குடும்பத்தினருடன் துமகூரில் வசிக்கிறார். துமகூரில் தங்க நகைக்கடை நடத்துகிறார். இவரது மகனுக்கு, திருமணம் நிச்சயமானது. இதற்காக கடந்த வாரம், மஹாராஷ்டிராவின் கான்பூருக்கு சென்றிருந்தனர்.
திருமணம் முடிந்த தால், நேற்று காலையில் துமகூருக்கு திரும்பினர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 785 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கட்டுகள், வெள்ளி பொருட்கள் உட்பட, 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போயிருந்தன.
ஊருக்கு செல்வதால், கடையில் இருந்தால் பாதுகாப்பு இல்லை என நினைத்து, அங்கிருந்த தங்க பிஸ்கட்டுகளையும், வெள்ளி பொருட்களையும் லட்சுமண் கணபத், தன் வீட்டில் வைத்திருந்தார்.
இதையறிந்து இவருக்கு அறிமுகம் உள்ளவர்களே, கொள்ளை அடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
துமகூரு நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.