கரிகட்டா மலையிலிருந்து காவிரியுடன் லோகபவானி இணைவதை காணலாம்!
- நமது நிருபர் -: மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது

மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது கரிகட்டா மலை. கடல் மட்டத்திலிருந்து, 2,697 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை இயற்கை அழகுடன் விளங்குகிறது.
கன்னட மொழியில், 'கரி' என்றால் கறுப்பு என்றும், 'கட்டா' என்றால் மலை என்றும் பொருள்படும். இதனால் இந்த மலைக்கு கறுப்பு மலை என்று பெயர் வந்துள்ளது.
துாரத்தில் இருந்து பார்க்கும் போது இந்த மலை அடர்ந்த மரங்கள், தாவரங்களால் பெரிய யானை படுத்து கிடப்பது போன்று தோற்றம் அளிக்கும்.
சமஸ்கிருதத்தில் இந்த மலைக்கு, 'நீலாசலா' என்று பெயரும் உண்டு. கரி என்ற கொடூரமான காட்டு யானை, இந்த மலையில் நான்கு சிவபக்தைகளை கொன்றதாகவும், அவர்களை மீண்டும் உயிர்பெற வைக்க குத்சமுனி என்ற முனிவர் விஷ்ணுவிடம் தவமிருந்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன.
இதனால், அந்த யானையின் நினைவாக, இந்த இடத்திற்கு கரிகட்டா என்ற பெயர் வந்ததாகவும் நம்பிக்கை உள்ளது.
மலை உச்சியில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. ராவணனிடம் இருந்து சீதையை மீட்க, இலங்கைக்கு பாலம் கட்டிய போது சுக்ரீவன் இங்கிருந்து மலையை பெயர்த்து எடுத்து சென்றாராம்.
விஷ்ணு பக்தர்கள் கேட்டு கொண்டதால் பாறையை இங்கு வைத்து சென்றதாக வரலாறு உள்ளது. இதனால் இந்த இடத்திற்கு, சிக்க திருப்பதி என்றும் பெயர் உள்ளது.
இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் காவிரி, லோகபவானி ஆறுகள் இணையும் அழகாக காட்சியை கண்டு ரசிக்கலாம். அதிகாலையில், 'டிரெக்கிங்' செல்ல ஏற்ற இடமாகவும் உள்ளது.
அடிவாரத்தில் இருந்து, 450 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகள் பாறையில் செதுக்கப்பட்டவை. நேராக மலை உச்சிக்கு வாகனங்களில் செல்ல சாலையும் உள்ளது.