Sport
மாவட்ட கிரிக்கெட் போட்டி கொட்டிவாக்கம் பள்ளி அசத்தல்
சென்னை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், கொட்டிவாக்கம் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான சோமசுந்தரம் கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், செங்குன்றத்தில் உள்ள கோஜன் மைதானத்தில், 30 ஓவர்கள் அடிப்படையில் நடந்த போட்டியில், கொட்டிவாக்கம் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணி, அண்ணா நகரின் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி அணியை எதிர்த்து மோதியது.
இதில், டாஸ் வென்ற அண்ணா நகர் பள்ளி அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 23 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய, கொட்டிவாக்கம் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, ஐந்து ஓவர்களிலேயே 72 ரன்கள் குவித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.