Politics
பஞ்சமி நிலங்களை கண்டறிய ஆணையம் அமைக்கப்படும்: அமைச்சர் வன்னி அரசு

சென்னை: ''தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிய, விரைவில் புதிய ஆணையம் அமைக்கப்படும்,'' என, வி.சி.க.,வை சேர்ந்த, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் - மாரிமுத்து: தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் மீட்புப் பணிகள் என்ன நிலையில் உள்ளன?
வி.சி.க., அமைச்சர் வன்னி அரசு: 1891ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில், தமிழகத்தில் ஆதி திராவிடர்களுக்காக, 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை, வேறு சமூகத்தினர் யாரும் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆதி திராவிடர்கள் என்று சொல்லப்படும் தலைப்பில் வரும் 76 சமூகத்துக்கும், பஞ்சமி நிலம் உரிமையானது. ஆனால், காலப்போக்கில் இந்த நிலங்கள் படிப்படியாக குறைந்தன.
இது குறித்த உண்மை நிலவரத்தை அறிய, கடந்த 1991ல் அ.தி.மு.க., ஆட்சியில், அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதன் பின், 2011 அ.தி.மு.க., ஆட்சியில், நீதிபதி மருதமுத்து தலைமையில் பஞ்சமி நிலம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. அதன் பின், 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை கண்டறிய, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுக்களின் அறிக்கை அடிப்படையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில், தற்போது 1.86 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதியுள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிய, அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக விரைவில் புதிய ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.