ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், புரோக்கர் கைது

தென்காசி: கடையநல்லுாரில் தனிப்பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் பணத்தை பெற்றுக் கொடுத்த புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவைச் சேர்ந்த கணபதி, தனது நிலத்தை மகன்கள் கருப்பசாமி, கல்யாணி ஆகியோருக்கு பிரித்துக் கொடுத்துள்ளார். அதில் கருப்பசாமி வீடு கட்டியுள்ளார். இதற்கு தனிப்பட்டா பெற விண்ணப்பித்த நிலையில், நிலத்தை அளந்து பட்டா வழங்க சர்வேயர் மாரிராஜ் 36 ,என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் நியமித்த புரோக்கர் ஜெகதீஷ் 23, கருப்பசாமியிடம் லஞ்சப்பணம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து கருப்பசாமி, தென்காசி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதரிடம் புகார் அளித்தார்.
நேற்று ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கருப்பசாமி, அலுவலகத்தில் சர்வேயர் மாரிராஜிடம் கொடுத்தார். அதை ஜெகதீஷிடம் வழங்குமாறு மாரிராஜ் கூறியுள்ளார். ஜெகதீஷ் பணத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.