Arts, culture, entertainment and media
கருத்து ஊசி சரியாக போடப்பட்டதா? - ‘சர்தார் 2’ விமர்சனம்

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டணி முந்தைய பாகத்தில் கொடுத்த வெற்றியை இந்த பாதத்திலும் தக்க வைத்தார்களா, இல்லையா?
டோக்கு என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பயோ ஆயுதம் ஒன்று நாட்டில் பல்வேறு மக்களை நோய்வாய்ப்பட செய்து அழிக்கிறது. அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை சரி கட்டும் விதமாக அதற்கு மருந்து கண்டுபிடித்து அந்த மருந்தை மக்களிடையே செலுத்துகின்றனர் ரா அதிகாரிகள் கார்த்தி அண்ட் மாளவிகா மோகனன் டீம். ஆனால் போதிய அளவு மருந்து கிடைக்காததால் பலர் இறக்க நேர்கிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சர்தார் கார்த்தி தலைமறைவாகிறார். அந்த பயோ ஆயுதமும் கார்த்திக்கு தெரியாமல் டிஆக்டிவேட் செய்து மறைத்து வைக்கப்படுகிறது.
பிறகு மகன் கார்த்தியும் ராவில் பணிபுரிந்து வருகிறார். அப்பொழுது அந்த பழைய பயோ ஆயுதம் வில்லன் எஸ் ஜே சூர்யாவால் கைப்பற்றப்பட்டு மீண்டும் இந்த உலகத்தை அழிக்க திட்டம் தீட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என மகன் கார்த்தி களத்தில் இறங்க ஒரு கட்டத்தில் நிலைமை கை மீறி போக தந்தை சர்தார் கார்த்தியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கோதாவில் குதிக்கிறார். இதன்பின் வில்லன் எஸ் ஜே சூர்யா தான் நினைத்ததை செய்து இந்த உலகத்தை அழித்தாரா, இல்லையா? எஸ் ஜே சூர்யாவிடம் இருந்து பயோ ஆயுதத்தை கைப்பற்றி சர்தார் மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் அழித்தார்களா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்துக் கொண்டு அதனுள் பயோவார் மற்றும் ஸ்பை திரில்லர் ஆகிய கதையமைப்பை உட்புகுத்தி அதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த ஹாலிவுட் படம் போல் ஒரு திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பி எஸ் மித்ரன். முதல் பாகத்தில் தண்ணீர் கேன் பிசினஸில் இருக்கும் மிகப்பெரிய ஸ்கேமை மக்களுக்கு வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற செய்தார் இயக்குநர் பி எஸ் மித்ரன். ஆனால் இந்த பாகத்திலோ ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களை விழிப்புணர்வாக கொடுக்க நினைத்து அதனுள் ஸ்பைத் திரில்லர் மற்றும் பயோ வார் போன்ற கதைகளை உட்பகுத்தி ஆக்சன் படமாக கொடுத்து அதன் மூலம் வெற்றி பெற முயற்சி செய்த பி எஸ் மித்திரனுக்கு சற்றே சறுக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஆங்காங்கே திரைக்கதை எங்கெங்கோ வழியில் பயணித்து பல்வேறு விதமான குழப்பங்களையும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு பல இடங்களில் அயர்ச்சியையும் சோர்வையும் கொடுத்திருக்கிறது. அதேபோல் படத்தின் நீளமும் 3 மணி நேரம் ஓடுவதும் படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களும் அதற்காக இயக்குநர் உழைத்த விதமும் பாராட்டும் விதத்தில் இருந்தாலும் அதே சமயம் மேக்கிங்-கையும் உலகத்தரம் வாய்ந்த விதத்தில் உருவாக்கியதற்காகவும் பாராட்டுக்கள் கொடுத்தாலும் திரைக்கதையில் சற்றே சொதப்பி இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
முதல் பாதி மிகவும் நீளமாகவும் ஆங்காங்கே வேகத்தடைகளுடன் நகர்ந்து இரண்டாம் பாகத்தில் இருந்து வேகம் எடுக்கும் திரைப்படம் விறுவிறுப்பாகவும் இறுதி கட்டத்தில் எஸ் ஜே சூர்யாவின் இன்வால்வ்மென்ட்க்கு பிறகு படம் சூடு பிடித்து இறுதிக்கட்டத்தில் விறுவிறுப்பான நல்ல ஸ்பை திரில்லர் பார்த்த படம் உணர்வை இந்த சர்தார் 2 கொடுத்து இருக்கிறது. இறுதிக்கட்டத்தில் இருந்த விறுவிறுப்பை படம் முழுவதும் கொடுத்து இருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
கார்த்தி இரு வேடங்களில் அப்பா - மகன் என கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பு கொடுத்து கவர்ந்திருக்கிறார். நாயகி மாளவிகா மோகனன் அதிகாரியாக வந்து ஆக்சன் காட்சிகளில் மிரட்டுகிறார். கொடுத்த வேலையை மிக மிக சிறப்பாக செய்து கவர்ந்திருக்கிறார். மாளவிகாவிடம் இருந்து இப்படி ஒரு கதாபாத்திரத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதுவே சர்ப்ரைஸ் ஆகவும் சிறப்பாகவும் அமைந்து அதை தன் பாணியில் கூடுதல் சிறப்பாக மாற்றி இருக்கிறார் மாளவிகா மோகனன். மற்றொரு நாயகி ஆஷிகா ரங்கநாத் வழக்கமான கதாநாயகியாக வந்து வழக்கமான விஷயங்களை செய்து விட்டு வழக்கம் போல் சென்று விடுகிறார். படத்திற்கு ஓரளவு பங்களிப்பு கொடுத்திருக்கிறார்.
வில்லன் எஸ் ஜே சூர்யா வழக்கம்போல் தனது ட்ரேட் மார்க் வில்லத்தனத்தை இந்த படத்திலும் காண்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இவரின் விறுவிறுப்பான கலகலப்பான வில்லத்தனம் கதாபாத்திரத்தை இன்னமும் ஸ்ட்ராங்காக மாற்றி படத்திற்கும் வலு சேர்த்து படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான முறையில் கலகலப்பாக நடித்து கைத்தட்டல் பெற்று இருக்கிறார். சிறிய கதாபாத்திரங்களில் வந்தாலும் யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து சிரிப்பு மூட்டி இருக்கின்றனர். இவர்களின் பங்களிப்பு இந்த படத்திற்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது. மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக நடித்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர்.
சாம் சி எஸ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்திற்கு எந்த மாதிரியான இசை தேவையோ கிட்டத்தட்ட மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்கள் கொடுக்கும் இசையை போல் இந்த படத்திற்கும் கொடுத்து வலு சேர்த்து இருக்கிறார். பொதுவாக தன் பாணியிலிருந்து விலகாத சாம் சி எஸ் இந்த படத்தில் அதை சரிக்கட்டும் விதமாக தன் பாணியிலிருந்து விலகி ஒரு ஸ்பை த்ரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பான மற்றும் விறுவிறுப்பான முறையில் இந்த சர்தார் 2வுக்கு இசையாக கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்து இருக்கிறது.
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு எந்த அளவு உழைப்பு தேவையோ அந்த அளவுக்கு உழைப்பை கொடுத்து நேர்த்தியான விறுவிறுப்பான காட்சி அமைப்புகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இவரின் இந்த நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளால் ஏற்படும் உடல் உபாதைகளையும் தீமைகளையும் கூற நினைத்திருக்கும் இயக்குநர் அதை ஒரு ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் படமாக கொடுத்திருப்பது புதியதாக இருந்தாலும் அதை இன்னமும் விறுவிறுப்பான முறையில் படத்தின் நீளத்தை குறைத்துக் கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.
சர்தார் 2 - வெளியே கொடூரன் உள்ளே சாந்தமானவன்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)