Politics
உங்களை மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்: பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி

டெல் அவிவ்: யூதர்களின் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மீண்டும் சந்திக்க ஆர்வமாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
யூதர்களின் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் மக்களுக்கும், உலகம் முழுவதும் வசிக்கும் யூதர்களுக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் புத்தாண்டு வாழ்ததுகள். இந்த நாளானது அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை கொண்டு வரட்டும். இவ்வாறு மோடி தெரிவித்து இருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: தனிப்பட்ட முறையில் எனக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி. உங்கள் தலைமைத்துவத்திற்கும், நீடித்த நட்பிற்கும் மீண்டும் நன்றி தெரிவிக்க இந்த யூதப் புத்தாண்டு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாம் இணைந்து நமது பண்டைய நாகரிகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை இரண்டு மாபெரும் ஜனநாயகங்களுக்கு இடையிலான முன்பு எப்போதும் இல்லாத ஒரு கூட்டாண்மையாக மாற்றி உள்ளோம். சாராவும்( நெதன்யாகு மனைவி) நானும் உங்களை விரைவில் மீண்டும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 12 ம் தேதி டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்திப் பேசியிருந்தார்.