தியாகிகளை நினைவு கூர்ந்து, நாட்டு நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும்- கலெக்டர் துர்கா பேச்சு
திண்டுக்கல்: விருப்பாட்சியில் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய கலெக்டர் துர்கா, 'தியாகிகளை நினைவு கூர்ந்து, நாட்டு நலனில் முழு அக்கறையோடு செயல்பட வேண்டும்.' எனப் பேசினார்.
விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் நினைவு நாளை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில், அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு கலெக்டர் துர்கா, சச்சிதானந்தம் எம்.பி., நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.கலெக்டர் துர்கா பேசியதாவது: விருப்பாட்சி பகுதியில் 40 ஆண்டுகள் ஆட்சி செய்த வெள்ளையர்களால் துாக்கிலிடப்பட்டவர் திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர். திப்புசுல்தானால் தமிழகத்தின் மிகப்பெரிய விடுதலைப் பேராட்ட வீரர், குப்பள பாட்சா என்றும், மக்களால் கோபால் நாயக்கர் என அழைக்கப்பட்டவர். சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு பாதுகாப்பையும், படை பலத்தையும் வழங்கியவர். நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த கோபால் நாயக்கர் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அவரது நினைவு நாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து, நாட்டு நலனில் முழு அக்கறையோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோம்., என்றார். நிகழ்வில் பழநி பொறுப்பு ஆர்.டி.ஓ., பிரபு, ஒட்டன்சத்திரம் தாசில்தார் சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.