Economy, business and finance
‘அமேசான் நவ்’ டெலிவரி சேவை... 3 மாதங்களில் ஒரு பில்லியன் டாலர் விற்பனை!

Zepto, Blinkit, Swiggy Instamart, Flipkart Minutes ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே குறுகிய நேர டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றுக்கு போட்டியாக அமேசான் நவ் சேவை தொடங்கப்பட்டது.
அமேசான் நிறுவனத்தின் ‘அமேசான் நவ்’ என்ற விரைவான டெலிவரி சேவை, கடந்த 3 மாதங்களில் செய்துள்ள வணிகத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான விற்பனையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியாவின் மேலாளர் சமீர் குமார் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Zepto, Blinkit, Swiggy Instamart, Flipkart Minutes ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே குறுகிய நேர டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றுக்கு போட்டியாக அமேசான் நவ் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக சமீர் குமார் தெரிவித்துள்ளார்.
அமேசான் இந்தியாவின் வரலாற்றிலேயே வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் பிரிவாக ‘அமேசான் நவ்’ உருவெடுத்துள்ளதாகவும், தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் ஆர்டர்கள் இரட்டிப்பாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
60-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்குள் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தினசரி சுமார் 7 லட்சம் ஆர்டர்கள் கையாளப்படுவதாகவும், சராசரியாக ஒரு ஆர்டரின் மதிப்பு 540 ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களின் வணிக வேகத்தின் அடிப்படையில், அமேசான் நவ் சேவை ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான விற்பனையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஆகும்.
